ஆதியாகமம் 43:1-22

ஆதியாகமம் 43:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாட்டிலே பஞ்சம் இன்னும் மிகக் கொடுமையாயிருந்தது. அதனால் எகிப்திலிருந்து கொண்டுவந்த தானியமெல்லாம் முடிந்தபின், அவர்கள் தகப்பன் யாக்கோபு தன் மகன்களிடம், “நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கிக் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது யூதா தன் தகப்பனிடம், “ ‘உங்களுடன் உங்கள் சகோதரனும் வராவிட்டால் என் முகத்தில் நீங்கள் விழிக்க முடியாது என்று எகிப்தின் அதிபதி கண்டிப்பாக எச்சரிக்கை செய்தான்.’ எங்கள் சகோதரனை எங்களுடன் அனுப்பினால்தான் நாங்கள் போய் உங்களுக்குத் தானியம் வாங்கிவருவோம். நீர் அவனை எங்களுடன் அனுப்பாவிட்டால் நாங்கள் அங்கே போகமாட்டோம்; ஏனெனில், ‘உங்கள் சகோதரனும் உங்களுடன் வந்தாலன்றி, நீங்கள் என் முகத்தில் விழிக்க முடியாது’ என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறான்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல், “உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்லி, ஏன் இந்தத் துன்பத்தை எனக்கு வருவித்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அந்த மனிதன் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பத்தைப்பற்றியும் விபரமாய் விசாரித்தான். ‘உங்களுடைய தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா?’ என்றும், ‘உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறானா?’ என்றும் கேட்டான். நாங்கள் அவனுடைய கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொன்னோம். ‘உங்கள் சகோதரனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்று சொல்வான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்கள். பின்பு யூதா தன் தகப்பனாகிய இஸ்ரயேலிடம், “நீங்களும் நாங்களும், எங்கள் பிள்ளைகளும் சாகாமல் வாழும்படி, நீர் அவனை என்னுடன் அனுப்பும். நாங்கள் உடனேயே போவோம். அவனுடைய பாதுகாப்புக்கு நானே பொறுப்பாய் இருப்பேன்; தனிப்பட்ட விதத்தில் அவனுக்காக நீர் என்னை உத்தரவாதியாக வைத்திருக்கலாம். அவனை மறுபடியும் உமது முன் கொண்டுவந்து நிறுத்தாவிட்டால், அந்தப் பழியை என் வாழ்நாள் முழுவதும் உமக்கு முன்பாக நான் சுமப்பேன். நாங்கள் தாமதியாமல் இருந்திருந்தால், இதுவரை நாங்கள் இரண்டுமுறை போய்த் திரும்பியிருக்கலாம்” என்றான். அதன்பின் அவர்களின் தகப்பனாகிய இஸ்ரயேல் அவர்களிடம், “அப்படியானால் நான் சொல்வதுபோல் செய்யுங்கள். நாட்டின் சிறந்த பொருட்களில் கொஞ்சம் தைலம், கொஞ்சம் தேன், கொஞ்சம் நறுமணப் பொருட்கள், வெள்ளைப்போளம், கொஞ்சம் பிஸ்தா கொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் ஆகியவற்றை உங்கள் சாக்குகளில் வைத்து, அந்த மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோங்கள். இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் உங்களுடன் கொண்டுபோங்கள், ஏனெனில், சென்றமுறை உங்கள் சாக்குகளில் வைக்கப்பட்ட வெள்ளிக்காசையும் நீங்கள் திருப்பிக் கொடுக்கவேண்டும். இப்பணம் ஒருவேளை தவறுதலாக வந்திருக்குமோ தெரியாது. உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த மனிதனிடம் போங்கள். எல்லாம் வல்ல இறைவன் சிறையிலிருக்கும் உங்கள் சகோதரனையும், தம்பி பென்யமீனையும் மறுபடியும் இவ்விடம் அனுப்பும்படி அந்த மனிதன் உங்களுக்கு இரக்கம் காட்டச்செய்வாராக. நானோ பிள்ளைகளை இழக்க வேண்டுமென்றால், பிள்ளைகளை இழந்தவனாவேன்” என்றான். அவ்வாறே அவர்கள் அன்பளிப்பையும் இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் எகிப்திற்கு விரைந்து சென்று, அங்கே யோசேப்பின் முன்னிலையில் போய் நின்றார்கள். பென்யமீன் அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இவர்களை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ, இவர்கள் இன்று மத்தியானம் என்னுடன் சாப்பிடுவதற்காக, ஒரு மிருகத்தை அடித்து ஆயத்தம் செய்” என்றான். யோசேப்பு கட்டளையிட்டபடியே அந்த அதிகாரி அவர்களை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள். அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள். அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல்முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம். ஆனால், போகும் வழியில் நாங்கள் இரவு தங்கிய இடத்தில், எங்கள் சாக்குகளைத் திறந்தோம். அப்பொழுது எங்கள் ஒவ்வொருவருடைய சாக்கின் வாயிலும், நாங்கள் கொடுத்த வெள்ளிக்காசு குறையாது அப்படியே இருக்கக் கண்டோம். எனவே அவற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம். அத்துடன் இம்முறையும் தானியம் வாங்குவதற்கு கூடுதலாக வெள்ளிக்காசைக் கொண்டுவந்திருக்கிறோம். யார் அந்த வெள்ளிக்காசை மறுபடியும் எங்கள் சாக்குகளில் வைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.

ஆதியாகமம் 43:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்களுடைய தகப்பன் அவர்களை நோக்கி: “நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றான். அதற்கு யூதா: “உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னான். எங்கள் சகோதரனை நீர் எங்களோடுகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடு சொல்லியிருக்கிறான்” என்றான். அதற்கு இஸ்ரவேல்: “உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்களுடைய வம்சத்தையும் குறித்து விபரமாக விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடுகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா” என்றார்கள். பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: “நீரும் நாங்களும் எங்களுடைய குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்க, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், இளைய மகனை என்னோடு அனுப்பும். அவனுக்காக நான் உத்திரவாதம் செய்வேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. நாங்கள் தாமதிக்காமல் இருந்தோமானால், இதற்குள்ளே இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருப்போமே” என்றான். அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் விலையுயர்ந்த பொருட்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். பணத்தை இருமடங்கு உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கை தவறி வந்திருக்கும். உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள். அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன்” என்றான். அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இருமடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பயணப்பட்டு, எகிப்திற்குப்போய், யோசேப்புக்கு முன்பாக வந்து நின்றார்கள். பென்யமீன் அவர்களோடுகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ இந்த மனிதர்களை வீட்டிற்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்செய், மத்தியானத்திலே இந்த மனிதர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான். அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான். தாங்கள் யோசேப்பின் வீட்டிற்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, “முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்திற்காக நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ள நம்மைக்கொண்டுபோகிறார்கள்” என்று சொல்லி, யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனிடம் வந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடு பேசி: “ஆண்டவனே, நாங்கள் தானியம் வாங்க முன்னே வந்துபோனோமே; நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்களுடைய சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கிலே இருந்ததைக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம். மேலும், தானியம் வாங்க வேறே பணமும் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்களுடைய சாக்குகளில் போட்டது யாரென்று அறியோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 43:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் குமாரர்களிடம், “எகிப்துக்குப் போய் இன்னும் கொஞ்சம் தானியங்களை வாங்கி வாருங்கள்” என்றான். ஆனால் யூதாவோ யாக்கோபிடம், “அந்நாட்டின் ஆளுநர் எங்களை எச்சரித்திருக்கிறார். ‘உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வராவிட்டால் உங்களோடு பேசமாட்டேன்’ என்றார். நீங்கள் பென்யமீனை எங்களோடு அனுப்பினால் நாங்கள் போய் தானியங்களை வாங்கி வருவோம். ஆனால் நீங்கள் பென்யமீனை அனுப்ப மறுத்தால் நாங்கள் போகமாட்டோம். அந்த மனிதன் இவன் இல்லாமல் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளான்” என்றான். இஸ்ரவேல் (யாக்கோபு) “அவனிடம் ஏன் உங்கள் இளைய சகோதரனைப்பற்றி சொன்னீர்கள்? ஏன் இதுபோல் ஒரு கெட்டச் செயலை எனக்குச் செய்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு சகோதரர்கள், “அந்த மனிதன் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். அவன் எங்களைப்பற்றியும் நமது குடும்பத்தைப்பற்றியும் கேட்டான். அவன் எங்களிடம், ‘உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? இன்னொரு தம்பி வீட்டில் இருக்கிறானா?’ என்று கேட்டான். நாங்கள் பதிலை மட்டும் சொன்னோம். அவன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டு வரச்சொல்லுவான் என்பதை நாங்கள் அறியோம்” என்றார்கள். பிறகு யூதா தன் தந்தையாகிய இஸ்ரவேலிடம், “பென்யமீனை என்னோடு அனுப்பி வையுங்கள் அவனுக்கு நான் பொறுப்பு. உணவுப் பொருட்களுக்காக எகிப்துக்குப் போகவே வேண்டும். நாம் போகாவிட்டால் நீரும், நமது குழந்தைகளும் மரித்து போவோம். அவனைப் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என்று உறுதி கூறுகிறேன். அவனை நாங்கள் திருப்பி அழைத்து வாராவிட்டால் நீங்கள் என்னை எப்பொழுதும் பழிகூறுங்கள். நீங்கள் முன்னமே போகவிட்டிருந்தால் இதற்குள் இரண்டுமுறை போய் வந்திருக்கலாம்” என்று சொன்னான். பிறகு அவர்கள் தந்தை இஸ்ரவேல், “இது உண்மை என்றால் பென்யமீனை உங்களோடு அழைத்துப்போங்கள். ஆனால் ஆளுநருக்குச் சில அன்பளிப்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டில் சேகரிக்கத்தக்கவற்றைச் சேகரியுங்கள். தேன், பிசின்தைலம், கந்தவர்க்கம், வெள்ளைப்போளம், தொபிந்துகொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். பணத்தை இரட்டிப்பாய் எடுத்துப்போங்கள். கடந்த முறை நீங்கள் கொடுத்த பணம் தவறி உங்களிடமே வந்துவிட்டது ஆளுநர் தவறு செய்திருக்கலாம். பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள். நீங்கள் ஆளுநர் முன்னால் நிற்கும்போது சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அவர் சிமியோனையும், பென்யமீனையும் திருப்பி அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் குமாரனை இழந்த துக்கத்துக்கு ஆளாவேன்” என்றான். எனவே, சகோதரர்கள் காணிக்கைப் பொருட்களோடும் இரண்டு மடங்கு பணத் தோடும் எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்போது பென்யமீனும் அவர்களோடு போனான். எகிப்தில், அவர்களோடு பென்யமீனை பார்த்த யோசேப்பு வேலைக்காரனிடம், “இவர்களை என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். ஒரு மிருகத்தைக் கொன்று சமையுங்கள். இன்று மத்தியானம் அவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான். வேலைக்காரன் யோசேப்பு சொன்னபடி செய்தான். அவர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பயந்தனர். “சென்ற முறை பணத்தை பைக்குள்ளே போட்டுவிட்டதால் இப்போது தனது வீட்டிற்கு அழைக்கிறார். அது நமக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தப்படும். நமது கழுதைகளைப் பறித்துக்கொண்டு நம்மை அடிமைகளாக்கிவிடுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். ஆகவே அவர்கள் அனைவரும் யோசேப்பின் வீட்டின் பொறுப்பாளனாகிய வேலைக்காரனிடம் வந்தனர். அவர்கள் அவனிடம், “ஐயா, இதுதான் உண்மை என்று வாக்குறுதிச் செய்கிறோம். சென்றமுறை தானியம் வாங்க வந்தோம். வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் பைக்குள் பணம் இருப்பதைப் பார்த்தோம். அதற்குள் எவ்வாறு வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கொண்டு வந்திருக்கிறோம். இந்த முறை உணவுப் பொருள் வாங்குவதற்கு அதிகப்படியான பணமும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.

ஆதியாகமம் 43:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான். அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள். பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும். அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான். அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும். உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள். அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள். பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான். அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி, யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனண்டையிலே சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி: ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே; நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம். மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.