ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.