கொலோசெயர் 3:12-25

கொலோசெயர் 3:12-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது. பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள். வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள். அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

கொலோசெயர் 3:12-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அன்பு காட்டப்பட்டவர்களுமாய் இருக்கிற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை உடுத்திக்கொள்ளுங்கள். அதுவே அவை எல்லாவற்றையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் கட்டி வைத்துக்கொள்கிறது. கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி, சொல்லின் மூலமோ, செயலின் மூலமோ நீங்கள் எதைச் செய்தாலும், கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்யுங்கள். அவர்மூலம் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்தியே அவைகளைச் செய்யுங்கள். மனைவிகளே, உங்கள் கணவருக்குப் பணிந்து நடவுங்கள். இதுவே கர்த்தரில் உங்களுக்கு ஏற்ற நடத்தையாயிருக்கிறது. கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்துபோவார்கள். அடிமைகளே, உங்கள் பூமிக்குரிய எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்; அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும், அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல, கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதருக்குச் செய்வதாக அல்ல, கர்த்தருக்குச் செய்வதாக முழு இருதயத்தோடும் செய்யுங்கள். உங்களுக்கான வெகுமதியாக உரிமைச்சொத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்று அறிவீர்களே. கிறிஸ்துவாகிய கர்த்தருக்கே நீங்கள் ஊழியம் செய்கிறீர்கள். தவறுசெய்கிற யாரும் தான் செய்கிற தவறுக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்வான். பாரபட்சம் காட்டப்படவே மாட்டாது.

கொலோசெயர் 3:12-25 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள். மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே. கணவன்மார்களே! உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களோடு சாந்தமாய் இருங்கள். குழந்தைகளே! எல்லா வகையிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது. பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள். வேலைக்கரார்களே! எல்லா வகையிலும் உங்கள் மண்ணுலக எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். உங்கள் எஜமானர்கள் உங்களுக்கு அருகில் இல்லாதபோதும், எல்லாக் காலங்களிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்துகொண்டிருப்பது நீங்கள் தேவனை மதிக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் கர்த்தரை மதிப்பவர்கள், ஆதலால் கபடமில்லாமல் பணிசெய்யுங்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காகச் செய்கிறோம் என்று எண்ணுங்கள். நீங்கள் உங்களுக்குரிய விருதை கர்த்தரிடம் இருந்து பெறுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களித்தபடி அவர் உங்களுக்குத் தருவார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறீர்கள். எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார்.

கொலோசெயர் 3:12-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

கொலோசெயர் 3:12-25

கொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSIகொலோசெயர் 3:12-25 TAOVBSI