2 நாளாகமம் 23
23
23 அதிகாரம்
1ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
2அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
3அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.
4நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,
5மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
6ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.
7லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
8ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதா கோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறை தீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவு கொடுக்கவில்லை.
9தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
10அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலது பக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.
11பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
12ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
13இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
14ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
15அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
16அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.
17அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.
18தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக. யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்து வைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,
19யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
20நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
21தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 நாளாகமம் 23: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.