1 சாமுவேல் 3:3-10

1 சாமுவேல் 3:3-10 TAOVBSI

தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான். மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.