1 இராஜாக்கள் 8:54-66

1 இராஜாக்கள் 8:54-66 TAOVBSI

சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து, நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது: தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக. கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக, அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக. ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான். பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள். கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான். அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள். எட்டாம் நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்