1 இராஜாக்கள் 8:54-66

1 இராஜாக்கள் 8:54-66 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவை நோக்கி சாலொமோன் இந்த மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் செய்துமுடித்தான். அப்போது, யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து முழங்காலில் நின்றுகொண்டிருந்தவன், அவ்விடத்தைவிட்டு எழுந்தான். அவன் எழுந்து நின்று முழு இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தையும் பலத்த சத்தமாய் ஆசீர்வதித்துச் சொன்னதாவது: “தாம் வாக்குப்பண்ணியபடியே நிறைவேற்றி, தம் மக்களான இஸ்ரயேலருக்கு ஆறுதலைக் கொடுத்த யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். தம்முடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுத்த எல்லா நல்வாக்குகளிலும் ஒரு வார்த்தையாவது நிறைவேறாமல் போகவில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவா எங்கள் தந்தையருடன் இருந்ததுபோல, எங்களுடனும் இருப்பாராக. அவர் எங்களைக் கைவிடாமலும், எங்களைவிட்டு ஒருபோதும் விலகாமலும் இருப்பாராக. அவருடைய எல்லா வழிகளிலும் நடக்கவும், அவர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் எங்கள் இருதயங்களை அவர் பக்கமாகத் திருப்புவாராக. யெகோவாவுக்கு முன்பாக நான் மன்றாடிய இந்த வார்த்தைகள் இரவும் பகலும் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் அருகே இருப்பதாக. அவர் தமது அடியானுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் அன்றாட தேவைகளுக்கேற்றபடி சார்பாய் இருப்பாராக. இதனால் உலகிலுள்ள எல்லா மக்களும் யெகோவாவே இறைவன் என்றும், வேறே ஒரு தெய்வமும் இல்லையென்றும் அறிந்துகொள்வார்கள். ஆனால் இக்காலத்தில் இருப்பதுபோலவே அவருடைய விதிமுறைகளின்படி வாழவும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் இருதயங்கள் முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்” என்றான். பின்பு அரசனும், அவனுடனிருந்த எல்லா இஸ்ரயேலரும், யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் சமாதான காணிக்கையாகச் செலுத்தினான். இவ்விதமாக அரசனும், எல்லா இஸ்ரயேலரும் யெகோவாவின் ஆலயத்தை அர்ப்பணம் பண்ணினார்கள். அதே நாளிலேயே அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் யெகோவாவின் முன்பாக அமைந்திருந்த வெண்கலப் பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கையின் கொழுப்பையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது. எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் சேர்ந்து இந்தக் காலத்தில் பண்டிகையைக் கொண்டாடினர்; எங்கள் இறைவனாகிய யெகோவாவின் முன்பாக முதல் ஏழு நாளும், பின்பு இன்னும் ஏழுநாளுமாக மொத்தம் பதினான்கு நாட்களாகக் கொண்டாடினார்கள். அடுத்தநாள் அரசன் மக்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அரசனை வாழ்த்தி, யெகோவா தமது அடியவனாகிய தாவீதுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.

1 இராஜாக்கள் 8:54-66 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாலொமோன் யெகோவாவை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன்னுடைய கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டு எழுந்து, நின்று, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடு சொன்னது: தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட தவறிப்போகவில்லை. நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய முன்னோர்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடப்பதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளுவதற்கும், நம்முடைய இருதயத்தை அவர்பக்கமாக திரும்பச்செய்வாராக. யெகோவாவே தேவன், வேறொருவரும் இல்லையென்பதை பூமியின் மக்களெல்லாம் அறியும்படியாக, அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது மக்களாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்திற்குத் தகுந்தபடி விசாரிப்பதற்கு, நான் யெகோவாவுக்கு முன்பாக விண்ணப்பம்செய்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் இருப்பதாக. ஆதலால் இந்த நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்களுடைய இருதயம் நம்முடைய தேவனாகிய யெகோவாவோடு உத்தமமாக இருப்பதாக என்றான். பின்பு ராஜாவும் அவனோடு இருந்த இஸ்ரவேலர்கள் அனைவரும், யெகோவாவுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். சாலொமோன் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாக, 22,000 மாடுகளையும், ஒரு 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாக ராஜாவும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். யெகோவாவுடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடமானது சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் சிறிதாக இருந்ததால், ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குமுன்பு இருக்கிற முற்றத்தின் மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், உணவுபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான். அந்தக்காலத்திலேயே சாலொமோனும், ஆமாத் பட்டணத்தின் எல்லைதுவங்கி எகிப்தின் நதிவரை இருந்து, அவனோடு இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் மக்கள் அனைவரும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும், அதற்குப் பின்பு வேறே ஏழுநாட்களுமாக பதினான்கு நாட்கள்வரை பண்டிகையை கொண்டாடினார்கள். எட்டாம் நாளிலே மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, யெகோவா தமது ஊழியக்காரனாகிய தாவீதுக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடு தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள்.

1 இராஜாக்கள் 8:54-66 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோன் இவ்வாறு தேவனிடம் ஜெபம் செய்தான். அவன் பலிபீடத்திற்கு முன்னால் முழங்காலிட்டு தன் கைகளை உயர்த்தி பரலோகத்தை நோக்கி வேண்டினான். அவன் தன் வேண்டுதல்களை முடித்தபிறகு எழுந்து நின்றான். பின் உரத்த குரலில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினான். சாலொமோன், “கர்த்தரை துதியுங்கள்! அவரது ஜனங்களுக்கு அவர் வாக்களித்தது போன்று இளைப்பாறுதல் அளிக்கிற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுங்கள்! கர்த்தர் தமது ஊழியன் மோசே மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வார்த்தை கூட தவறுவதில்லை. கர்த்தர் அத்தனையையும் காப்பாற்றுவார்! தேவனாகிய கர்த்தர் நமது முற்பிதாக்களோடு இருந்ததுப்போலவே நம்மோடும் இருப்பார், கர்த்தர் நம்மை விட்டு விலகக்கூடாது என்று ஜெபிக்கிறேன். நாம் அவர் பக்கம் திரும்பி அவரைப் பின்பற்றுவோம். நமது முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த சட்டங்களுக்கும், முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், நமது தேவனாகிய கர்த்தர், எனது இந்த ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் மறவாமல் இருப்பார். அவர் இதனை அவரது ஊழியனுக்கும் ராஜாவுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் செய்வார். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கர்த்தர் செய்துவந்தால், உலகில் உள்ள ஜனங்கள் அனைவரும் அவரை உலகின் ஒரே தேவனாகக் கருதுவார்கள். நீங்கள் நமது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும். எப்பொழுதும் அவரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இப்பொழுது போலவே எதிர்காலத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்” என்றான். பிறகு சாலொமோன் ராஜாவும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்தினார்கள். 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் கொன்றனர். இவை சமாதானப் பலியாகக் கொடுக்கப்பட்டன. இவ்வழியில்தான், ராஜாவும் இஸ்ரவேலர்களும் ஆலயத்தை கர்த்தருக்கு உரியதாக ஆக்கினார்கள். அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது. ஆலயத்தில் சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் விடுமுறையைக் கொண்டாடினார்கள். அனைத்து இஸ்ரவேலர்களும் ஆமாத்தின் எல்லை தொடங்கி எகிப்தின் நதி மட்டுமுள்ள ஜனங்களும் அங்கே இருந்தனர். அவர்கள் ஏழு நாட்கள் உண்பதும் குடிப்பதும் கர்த்தருடன் சேர்ந்து மகிழ்வதுமாக இருந்தனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் இருந்தனர். மொத்தம் 14 நாட்கள் கொண்டாடினர். மறுநாள், சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்பச் சொன்னான். அனைவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்கள். கர்த்தர் தனது ஊழியனான தாவீதிற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நன்மை செய்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

1 இராஜாக்கள் 8:54-66 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து, நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது: தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக. கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக, அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக. ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான். பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள். கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான். அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள். எட்டாம் நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.