1 நாளாகமம் 17
17
17 அதிகாரம்
1தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
2அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
3அன்று இராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
4நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
5நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.
6நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ?
7இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
8நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
9நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.
10உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
11நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
12அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
13நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனைவிட்டு விலகப்பண்ணாமல்,
14அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
15நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
16அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
17தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.
18உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
19 கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
20 கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.
21உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்தி,
22உமது ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உமது ஜனமாயிருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.
23இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
24ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாகத் திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது.
25உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, உமது அடியானுக்கு மனதைரியம் கிடைத்தது.
26இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
27இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 நாளாகமம் 17: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.