தீத்து 3

3
நன்மை செய்ய ஆலோசனைகள்
1ஆளுகை செய்கின்றவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அடிபணிந்திருக்கவும், கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்கவும் எல்லாவிதமான நல்ல செயல்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்து. 2ஒருவரையும் அவதூறாய் பேசாமலும், எல்லோருடனும் சமாதானமும் கனிவும் உடையவர்களாகவும், அனைவருக்கும் முன்பாக எப்போதும் தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்து.
3நாமும்கூட ஒரு காலத்தில் மூடர்களாயும், கீழ்ப்படியாதவர்களாயும், ஏமாற்றப்பட்டவர்களாயும், பலவிதமான தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாயும் இருந்தோம். தீமை செய்யும் எண்ணமுடையவர்களாகவும், பொறாமை நிறைந்தவர்களாகவும், மற்றவர்களால் வெறுக்கப்படுகின்றவர்களாகவும், ஒருவரை ஒருவர் வெறுக்கின்றவர்களாகவும் வாழ்ந்தோம். 4ஆனால் நமது இரட்சகராகிய இறைவனுடைய#3:4 இரட்சகராகிய இறைவனுடைய – பிதாவாகிய இறைவனையே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். தயவும் கருணையும் வெளிப்பட்டபோது 5நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அன்றி, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் நம்மை மீட்டெடுத்தார். மறுபிறப்பின் கழுவப்படுதல் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுப்பித்தல் மூலமாகவுமே அவர் நம்மை மீட்டார். 6அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர் நம்மீது நிறைவாக ஊற்றினார். 7ஆகவே அவருடைய கிருபையின் மூலமாய் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு, நித்திய வாழ்வு என்ற எதிர்பார்ப்பை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்கின்ற அவருடைய வாரிசுகளாக வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார். 8இது நம்பத்தகுந்த கூற்று. ஆகவே, இவற்றை நீ வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனைச் சார்ந்திருக்கின்றவர்கள், நல்ல செயல்களை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்து அதிலே குறியாய் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இவை நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன.
9ஆனால் மூடத்தனமான கருத்து முரண்பாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், நீதிச்சட்டத்தைப் பற்றிய தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் அவை பயனற்றவை, வீணானவை. 10பிரிவினை உண்டாக்குகின்றவர்களை எச்சரிக்கை செய், மேலும் இரண்டாவது முறையாகவும் எச்சரிக்கை செய். அதன்பின்பு அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாதே. 11அப்படிப்பட்டவர்கள், சீர்கெட்டவர்களாகவும், பாவத்தில் வாழ்கின்றவர்களாகவும், தங்களைத் தாங்களே தண்டனைக்கு உட்படுத்திக்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று நிச்சயமாக அறிந்துகொள்.
இறுதி வாழ்த்துரை
12அர்த்தெமாவை அல்லது தீகிக்குவை நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நிக்கொப்போலி நகரில் இருக்கும் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். ஏனெனில் குளிர் காலத்தில் நான் அங்கே தங்கியிருக்கத் தீர்மானித்திருக்கின்றேன். 13சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாமல் அவர்களுடைய பயணத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பி வை.
14மற்றவர்களின் அன்றாட அவசிய தேவைகளில் கொடுத்து உதவத்தக்கதாக, நல்ல செயல்களைச் செய்ய நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பயனற்றதான வாழ்க்கை வாழக் கூடாது.
15என்னோடு இருக்கும் எல்லோரும் உனக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
சக விசுவாசிகளான#3:15 விசுவாசிகளான – கிரேக்க மொழியில், விசுவாசத்திற்குள்ளாக என்றுள்ளது. நம்மில் அன்பாய் இருக்கின்றவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல்.
கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தீத்து 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்