வெளிப்படுத்தல் 20
20
ஆயிரம் ஆண்டுகள்
1பின்பு பரலோகத்திலிருந்து ஒரு இறைதூதன் இறங்கி வருவதைக் கண்டேன். அவன் பாதாளத்தின் சாவியையும், கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். 2அவன் பழங்காலத்துப் பாம்பை, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அந்த இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, அதை ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான். 3அந்த ஆயிரம் வருடங்கள் முடியும் வரை மக்களை அவன் இனியும் ஏமாற்றாதபடி, அவனைப் பாதாளக்குழிக்குள் தள்ளி பூட்டியடைத்து, அதன்மீது முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்த பின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
4நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த அரியணைகளைக் கண்டேன். அதன்பின்பு, இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும் தலை துண்டிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். இவர்கள் அந்த மிருகத்தையோ அதன் உருவச் சிலையையோ வணங்காதவர்கள்; தங்கள் நெற்றியிலோ அல்லது தங்கள் கைகளிலோ அவனுடைய அடையாளத்தைப் பெறாதவர்கள். இவர்கள் உயிர் பெற்று எழுந்து, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்தார்கள். 5மரணித்த மற்றவர்களோ அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரை உயிர் பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல். 6முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கின்றார்கள். இவர்கள் மீது இரண்டாம் மரணத்திற்கு வல்லமை இல்லை. இவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய மதகுருக்களாக இருந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
சாத்தானின் தோல்வி
7அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான். 8அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற கோகு மற்றும் மாகோகு#20:8 கோகு மற்றும் மாகோகு – இந்தப் பெயர்கள் எசேக்கியேல் 38, 39ம் அதிகாரங்களிலும் காணப்படுகின்றன. தேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், யுத்தத்திற்காக அவர்களை ஒன்றுதிரட்டி சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான். எண்ணிக்கையில் அவர்கள் கடற்கரை மணலைப் போல் இருப்பார்கள். 9அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், அவர் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால், வானத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டெரித்துவிட்டது. 10அவர்களை ஏமாற்றிய பிசாசானவன், கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டான். அங்கேதான் அந்த மிருகமும் போலி இறைவாக்கினனும் வீசப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் அங்கே வேதனை அனுபவிப்பார்கள்.
இறுதி நியாயத்தீர்ப்பு
11பின்பு, பெரிய வெண்மையான அரியணையையும் அதில் அமர்ந்திருக்கின்றவரையும் கண்டேன். அவரது முன்னிலையில் பூமியும் வானமும் விலகியோடி, அவை இடமின்றிப் போயின. 12பின்பு நான், மரணித்த பெரியோர்களும் சிறியோர்களும் அந்த அரியணைக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது புத்தகங்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் புத்தகம் என்ற இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அந்த புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தபடி, இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள். 13கடலில் இறந்தவர்களை கடல் ஒப்படைத்தது. மரணமும் பாதாளமும் அவைகளுக்குள் இருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள். 14பின்பு, மரணமும் பாதாளமும் நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாவது மரணம். 15எவரது பெயர் வாழ்வின் புத்தகத்திலே எழுதப்படவில்லையோ, அவர் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 20: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.