வெளிப்படுத்தல் 13
13
கடலில் இருந்து வெளிவரும் மிருகம்
1அது#13:1 அது – அந்த இராட்சதப் பாம்பு என்று பொருள். கடற்கரையில் நின்று கொண்டிருந்தது.#13:1 நின்று கொண்டிருந்தது – சில மொழிபெயர்புகளில் நான் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகளிலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதன் ஒவ்வொரு தலையிலும் இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் காணப்பட்டது. 2நான் பார்த்த அந்த மிருகம் ஒரு சிறுத்தையைப் போல் காணப்பட்டது. ஆனால் அதன் கால்கள் கரடிகளின் கால்களைப் போலவும், அதன் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் காணப்பட்டது. இராட்சதப் பாம்பானது தனது வல்லமையையும் தனது அரியணையையும் தனது பெரிதான அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுத்தது. 3அந்த மிருகத்தின் தலைகளில் ஒன்றில் பாரதூரமான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது. ஆனாலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் காயம் குணமடைந்திருந்தது. உலகத்தார் அனைவரும் வியப்படைந்தவர்களாய் அந்த மிருகத்தைப் பின்பற்றிச் சென்றனர். 4அந்த மிருகத்திற்கு இராட்சதப் பாம்பு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அத்தோடு, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று சொல்லி அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கினார்கள்.
5அந்த மிருகத்திற்குப் பெருமையான பேச்சையும், அவமதிப்பான வார்த்தைகளையும் பேசுகின்ற ஒரு வாய் கொடுக்கப்பட்டது. 42 மாதங்கள் தன் இஷ்டப்படி செயல்பட அதற்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டது. 6அது இறைவனை நிந்திப்பதற்காகவும், அவருடைய பெயரையும் அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாழ்கின்றவர்களையும் அவதூறாய் பேசுவதற்காகவும் தன் வாயைத் திறந்தது. 7பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம் செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அத்தோடு, ஒவ்வொரு கோத்திரத்தையும், மக்களையும், மொழியையும், நாட்டையும் சேர்ந்தவர்கள் மேல் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8உலகம் படைக்கப்பட்டதிலிருந்து எவர்களுடைய பெயர்களெல்லாம் ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்தை வணங்குவார்கள்.
9கேட்பதற்கு காது உள்ளவன் கேட்கட்டும். ஏனெனில்,
10“எவராவது சிறைபிடிக்கப்பட விதிக்கப்பட்டிருந்தால்,
அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
எவராவது வாளால் கொல்லப்பட விதிக்கப்பட்டிருந்தால்,
அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.”#13:10 எரே. 15:2
ஆகவே, பரிசுத்தவான்கள் இந்நிலையில் பொறுமையும் விசுவாசமும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11பின்பு, பூமியிலிருந்து வேறொரு மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப் போல பேசியது. 12இது, முதல் மிருகத்தின் முழு அதிகாரத்தையும் அதன் சார்பாகப் பிரயோகித்தது. அத்துடன், படுகாயமடைந்து குணமடைந்திருந்த அந்த முதல் மிருகத்தை பூமியும் அதில் குடியிருக்கின்றவர்களும் வணங்கும்படி செய்தது. 13இந்த மிருகம் பெரிய அற்புத அடையாளங்களைச் செய்து, எல்லா மனிதரும் காணும்படியாக வானத்திலிருந்து பூமியின் மேல் நெருப்பு வந்து விழும்படியும் செய்தது. 14முதல் மிருகத்தின் வல்லமையானது அதன் சார்பாக இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டதனால், இது அடையாளங்களைச் செய்து பூமியின் மக்களை ஏமாற்றியது. அத்தோடு, வாள்வெட்டால் காயமடைந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்ற அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ண அதற்கு ஒரு உருவச் சிலையைச் செய்யும்படி பூமியின் மக்களுக்கு உத்தரவிட்டது. 15முதல் மிருகத்தின் உருவச் சிலையைப் பேச வைக்கவும் உருவச் சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் கொலை செய்யவும், அந்த உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கும் வல்லமையானது இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. 16அத்துடன் இந்த மிருகமானது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், குடியுரிமை பெற்றவர்கள், அடிமைகள் என எல்லோரும் தங்கள் வலது கையிலாவது தங்கள் நெற்றியிலாவது ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. 17இதனால், அந்த மிருகத்தின் பெயரை அல்லது அதன் பெயருக்குரிய எண்ணை அடையாளமாகப் பெறாத எவராலும் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது.
18இதை புரிந்துகொள்ள ஞானம் தேவை. அறிவாற்றல் உடையவர் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் போட்டுப் பார்க்கட்டும். ஏனெனில் அது ஒரு மனிதனுக்குரிய எண். அந்த எண் 666 ஆகும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 13: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.