மாற்கு 8

8
இயேசு நாலாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்
1அந்நாட்களில், மக்கள் திரும்பவும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபோது அவர்களிடம் உண்பதற்கு ஒன்றுமில்லாதிருந்தது. அதனால் இயேசு தமது சீடர்களைத் தம்மிடமாய் அழைத்து, 2“நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன். அவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கின்றார்கள். உண்பதற்கோ ஒன்றுமில்லை. 3நான் அவர்களைப் பசியோடு வீட்டிற்கு அனுப்பினால் வழியில் அவர்கள் மயங்கி விழுவார்கள். மேலும், இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்றார்.
4அதற்கு அவருடைய சீடர்கள், “ஒருவரால் இந்த ஒதுக்குப்புறமான இடத்திலே இவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள்.
5இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள்” என்றார்கள்.
6அப்போது அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தாரைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்திய பின், அவற்றைத் துண்டுகளாக்கி, மக்களுக்குக் கொடுக்கும்படி அதைத் தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 7அவர்களிடம் சில சிறிய மீன்களும் இருந்தன; அவற்றுக்காகவும் அவர் நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி சீடர்களுக்குச் சொன்னார். 8மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். பின்பு மீதியான அப்பத் துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள். 9அங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, 10தமது சீடர்களுடனே படகில் ஏறி தல்மனூத்தா பிரதேசத்திற்குச் சென்றார்.
11அப்போது பரிசேயர்கள் வந்து இயேசுவோடு விவாதம் செய்யத் தொடங்கினார்கள். அவரைச் சோதிக்கும்படியாக வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள். 12அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர், அடையாளத்தைத் தேடுவது ஏன்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவர்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். 13பின்பு அவர் அவர்களைவிட்டு திரும்பவும் படகில் ஏறி கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார்.
பரிசேயர்களினதும் ஏரோதினதும் புளிப்பூட்டும் பதார்த்தம்
14சீடர்கள் அவ்வேளையில் தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்து போனார்கள். அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே படகில் இருந்தது. 15இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள், பரிசேயர்களினதும் ஏரோதினதும் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார்.
16அப்போது அவர்கள் தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
17அவர்கள் பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கின்றீர்கள்? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ? 18நீங்கள் கண்கள் இருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? 19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தபோது மீதியான அப்பத் துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார்.
அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
20“நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத் துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார்.
அதற்கு அவர்கள் “ஏழு” என்றார்கள்.
21அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் இன்னுமா விளங்கிக்கொள்ளவில்லை?” என்று கேட்டார்.
பெத்சாயிதாவில் பார்வையற்றவன் பார்வையடைதல்
22அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது பார்வையற்ற ஒருவனை சிலர் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொட வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள். 23ஆகவே, அவர் அவனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுசென்றார். பின்பு, அவனுடைய கண்களின் மேல் துப்பி தமது கைகளை அவன்மீது வைத்து, “நீ எதையாவது காண்கின்றாயா?” என்று கேட்டார்.
24அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கின்றேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகின்ற மரங்களைப் போல் காணப்படுகிறார்கள்” என்றான்.
25இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின் மேல் வைத்தார்; அப்போது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் தன்னுடைய பார்வையைத் திரும்பப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்தான். 26இயேசு அவனிடம், “கிராமத்துக்குள் போகாதே” என்று சொல்லி அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
இயேசுவை, மேசியா என பேதுரு அறிக்கையிடுதல்
27இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா-பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கின்றார்கள்?” என்று கேட்டார்.
28அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கின்றார்கள்” என்றார்கள்.
29அதற்கு அவர், “அப்படியானால், நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பேதுரு, “நீர் மேசியா” என்றான்.
30அப்போது இயேசு, “தம்மைக் குறித்து ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என எச்சரித்தார்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
31மனுமகன் அநேக பாடுகள் பட வேண்டும் என்றும், சமூகத் தலைவர்களாலும் தலைமை மதகுருக்களாலும் நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் எழுந்திருக்க வேண்டும் என்றும் அவர் அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். 32இதையெல்லாம் இயேசு வெளிப்படையாகவே சொன்னார். அப்போது, பேதுரு அவரை தனியே அழைத்துக்கொண்டு போய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
33அப்போது, தனது சீடர்களை திரும்பிப் பார்த்த இயேசு பேதுருவைக் கண்டித்து, “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்குரிய காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
சிலுவையின் பாதை
34பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் தமது சீடர்களையும் தம்மிடம் அழைத்து, “யாராவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து தனது சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். 35ஏனெனில், தன்னுடைய உயிரைக் காப்பாற்ற விரும்புகின்றவன் அதை இழந்து போவான். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தன் உயிரை இழக்கிறவன் அதைக் காத்துக்கொள்வான். 36ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனால் அதனால் அவனுக்கு நன்மை என்ன? 37ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்க முடியும்? 38இறை துரோகமும்,#8:38 இறை துரோகமும் – கிரேக்க மொழியில் தகாத உறவு என்றுள்ளது. இது இறைவனுக்குத் துரோகம் செய்வதைக் குறிக்கும். பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில் யாராவது என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால் மனுமகனும் பரிசுத்த தூதர்களுடன் தன்னுடைய பிதாவின் மகிமையில் வரும்போது, அவனைக் குறித்து வெட்கப்படுவார்” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மாற்கு 8: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

மாற்கு 8 க்கான வீடியோக்கள்