லூக்கா 9
9
இயேசு பன்னிரண்டு சீடர்களை அனுப்புதல்
1இயேசு பன்னிரண்டு பேரையும் ஒன்றாக அழைத்து, பேய்களைத் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார். 2அத்துடன், இறைவனுடைய அரசைப் பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களை அனுப்பினார். 3அவர் அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். கைத்தடியையோ, பயணப் பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம். 4நீங்கள் எந்த வீட்டுக்குள் போனாலும் அந்த இடத்திலேயே தங்கியிருந்துவிட்டு, பின் அந்த பிரதேசத்தை விட்டுப் புறப்படுங்கள். 5மக்கள் உங்களை வரவேற்காது போனால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக உங்கள் கால் தூசியை உதறி விடுங்கள்” என்றார். 6அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமம் கிராமமாகச் சென்று எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து மக்களைக் குணமாக்கினார்கள்.
7சிற்றரசனான ஏரோது,#9:7 ஏரோது – இயேசு பிறந்த போதிருந்த ஏரோது அரசனின் மகனான ஏரோது அந்திபாஸ். இவன் கலிலேயாப் பிரதேசத்தை ஆண்டான். நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவானே இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான். 8வேறு சிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர் பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டார்கள். 9ஆனால் ஏரோதுவோ, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேன். ஆயினும் இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, இயேசுவைப் பார்க்க முயற்சி செய்தான்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்
10அப்போஸ்தலர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தனித்திருப்பதற்காகப் பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார். 11ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின் சென்றார்கள். அவர் அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, சுகவீனமாய் இருந்தோரை குணமாக்கினார்.
12மாலை வேளையானபோது பன்னிரண்டு பேரும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பி விடும். அவர்கள் சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களுக்கும் நாட்டுப் புறத்திற்கும் போய், உணவையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். ஏனெனில், நாம் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கின்றோம்” என்றார்கள்.
13அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார்.
அதற்கு அவர்கள் அவரிடம், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கி வர வேண்டுமோ?” என்றார்கள். 14அங்கே ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தார்கள்.
ஆனாலும், அவர் தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். 15சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். 16அப்போது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். 17அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
பேதுருவின் அறிக்கை
18ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும் அவருடனே இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கின்றார்கள்?” எனக் கேட்டார்.
19அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கிறார்கள்; வேறு சிலர் உம்மை எலியா என்கிறார்கள்; இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர் பெற்று வந்திருப்பதாகச் சொல்கின்றார்கள்” என்றார்கள்.
20அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” எனக் கேட்டார்.
பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் மேசியா” என்றான்.
இயேசு தமது மரணத்தைக் குறித்து முன்னறிவித்தல்
21இயேசு அவர்களிடம், “இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார். 22மேலும் அவர் அவர்களிடம், “மனுமகன் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்; சமூகத் தலைவர்களாலும், தலைமை மதகுருக்களாலும், நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்றார்.
23பின்பு அவர் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தினந்தோறும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும். 24ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் எவனும், அதை இழந்து போவான். என் பொருட்டு தன் உயிரை இழந்து விடுகின்றவனோ, அதைக் காத்துக்கொள்வான். 25ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவனுக்கு நன்மை என்ன? 26எவனாவது என்னைக் குறித்தும், என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனுமகனும் தனது மகிமையிலும் பிதாவின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவனைக் குறித்தும் வெட்கப்படுவார்.
27“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசைக் காணும் முன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
இயேசுவின் மகிமையான தோற்றம்
28இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின், அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு, மன்றாடுவதற்கு ஒரு மலைக்குச் சென்றார். 29அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள் வெண்மையாய் மின்னின. 30மோசே, எலியா ஆகிய இரண்டு பேரும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தார்கள். 31அவர்கள், எருசலேமில் விரைவாய் இயேசு நிறைவேற்றப் போகின்ற அவருடைய மரணத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். 32பேதுருவும் அவனோடு இருந்தவர்களும் கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவருடைய மகிமையையும் அவருடன் நின்ற இரண்டு மனிதர்களையும் கண்டார்கள். 33அந்த மனிதர்கள் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஐயா, நாம் இங்கே இருப்பது நல்லது, உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். தான் சொல்வது என்னவென்று அறியாமல் அவன் அப்படிச் சொன்னான்.
34அவன் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு மேகம் அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் அவர்களை சூழ்ந்து கொண்டபோது, அவர்கள் பயந்தார்கள். 35அப்போது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிவு செய்தவர்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று ஒரு குரல் கேட்டது; 36அந்தக் குரல் ஒலித்த பின்பு இயேசு மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். சீடர்களோ, தாங்கள் கண்டதை அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை, அவர்கள் இதைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.
தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணமாக்குதல்
37மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெரும் மக்கள் கூட்டம் அவரைச் சந்தித்தது. 38மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை அழைத்து, “போதகரே, என் பிள்ளையைப் பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. 39ஒரு ஆவி அவனைப் பிடித்துக்கொள்கின்றது. அப்போது அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாயில் நுரை தள்ளுகிறது. அது அவனை ஒருபோதும் விட்டுப்போகாமல் அவனை வேதனைப் படுத்துகிறது. 40அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை” என்றான்.
41அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்ளக் கூடும்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்றார்.
42அச்சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பேய் அவனை வலிப்புக்குள்ளாக்கி தரையில் தள்ளி வீழ்த்தியது. ஆனால் இயேசுவோ அந்த தீய ஆவியை அதட்டி, அச்சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். 43அவர்கள் எல்லோரும் இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள்.
இயேசு தமது மரணத்தைக் குறித்து இரண்டாம் முறை முன்னறிவித்தல்
இயேசு செய்த எல்லாவற்றையும் குறித்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தமது சீடர்களிடம், 44“நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு, மனிதருடைய கைகளிலே ஒப்புக்கொடுக்கப்படுவார்” என்றார். 45ஆனால் அவர்களோ, அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததனால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.
46சீடர்களுக்கிடையில், தங்களில் யார் பெரியவன் என்பதுபற்றி ஒரு வாக்குவாதம் எழுந்தது. 47இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். 48பின்பு அவர் அவர்களிடம், “இந்தச் சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான். உங்கள் எல்லோரிலும் சிறியவனாய் இருக்கின்றவன் எவனோ, அவனே பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.
49அப்போது யோவான் அவரிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
50அதற்கு இயேசு, “அவனைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கின்றான்” என்றார்.
சமாரியர்கள் எதிர்ப்பு
51தாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, இயேசு மனவுறுதியோடு எருசலேமை நோக்கிப் புறப்பட்டார். 52அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்னால் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குப் போனார்கள். 53அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அக்கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை. 54அவருடைய சீடர்களான யாக்கோபும் யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்தது போல்,#9:54 சில பிரதிகளில் எலியா செய்தது போல் என்பது காணப்படுவதில்லை இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள். 55ஆனால் இயேசுவோ அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் எப்படிப்பட்ட ஆவிக்கு உரியவர்கள் என்று அறியாமல் இருக்கின்றீர்களே. ஏனெனில், மனுமகன் மனிதருடைய உயிர்களை அழிக்க வரவில்லை. அவற்றை இரட்சிக்கவே வந்தார்” என்று கண்டித்தார்.#9:55 சில பிரதிகளில் இயேசுவின் இக்கூற்று காணப்படுவதில்லை 56அதன்பின் அவர்கள் வேறு கிராமத்திற்குப் போனார்கள்.
இயேசுவை பின்பற்ற விரும்புகின்றவர்களுக்கான சவால்
57அவர்கள் வழியில் நடந்து போய்க் கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
58இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
59அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்துவிட்டு வர அனுமதி தாரும்” என்றான்.
60அப்போது இயேசு அவனிடம், “இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
61இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப் போய், எனது குடும்பத்தவர்களிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்” என்றான்.
62அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்கின்ற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்கு உகந்தவனல்ல” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
லூக்கா 9: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.