யோவான் 19
19
இயேசுவை சிலுவையில் அறைவதற்கான தீர்ப்பு
1பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். 2இராணுவ வீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மேலாடையை உடுத்தி, 3மறுபடியும் அவரிடம் போய், “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.
4மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதர்களிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகின்றேன்” என்றான். 5இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக் கொண்டும், கருஞ்சிவப்பு நிற மேலாடையை அணிந்து கொண்டும் வெளியே வந்தபோது பிலாத்து அவர்களிடம், “இதோ இந்த மனிதன்!” என்றான்.
6தலைமை மதகுருக்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
அப்போது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.
7அதற்கு யூதர்கள், “எங்களுக்கு ஒரு நீதிச்சட்டம் இருக்கின்றது. அதன்படி இவன் மரணிக்க வேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கின்றான்” என்றார்கள்.
8பிலாத்து இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாய் பயந்தான். 9அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. 10அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேச மறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும் உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று உனக்குத் தெரியாதா?” என்றான்.
11அதற்கு இயேசு, “பரலோகத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆகவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார்.
12அப்பொழுதிலிருந்தே பிலாத்து, இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கின்றவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழுகிறான்” என்று சத்தமிட்டார்கள்.
13பிலாத்து இதைக் கேட்டபோது, இயேசுவை வெளியே கொண்டுவந்து தனது நீதி வழங்கும் அரியணையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரேய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. 14அன்று பஸ்கா பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.
15ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
“உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கின்றீர்கள்?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு தலைமை மதகுருக்கள், “ரோம பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.
16கடைசியாக, பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
எனவே இராணுவ வீரர்கள் இயேசுவைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 17இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரேய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது. 18அங்கே அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார்.
19பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே,
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்” என்று எழுதப்பட்டிருந்தது.
20யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரேய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21யூதரின் தலைமை மதகுருக்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுத வேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக் கொண்டான் என்று எழுதும்” என்றார்கள்.
22அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
23இராணுவ வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்கு பங்குகளாகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ் வரை நெய்யப்பட்டதாயிருந்தது.
24எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்கு என்று சீட்டுப் போட்டுப் பார்க்கலாம்” என்றார்கள்.
“அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்,
எனது உடைக்காக சீட்டுப் போட்டார்கள்.”#19:24 சங். 22:18
என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த இராணுவ வீரர்கள் செய்தார்கள்.
25இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள். 26தமது தாயும், தாம் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அவர் தமது தாயிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்” என்றார். 27அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து, இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.
இயேசுவின் மரணம்
28பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்து விட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி, “நான் தாகமாய் இருக்கின்றேன்” என்றார். 29அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை ரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற் பஞ்சை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள். 30இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும், அவர் தமது தலையைச் சாய்த்து இறுதி மூச்சை விட்டார்.
31அது பஸ்கா பண்டிகைக்கான ஆயத்தம் செய்யும் நாளாயிருந்தது. மாலையானதும் ஓய்வுநாள் ஆரம்பிப்பதால், உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. (ஆரம்பிக்கப் போகும் நாள் ஒரு முக்கிய ஓய்வுநாளாய் இருந்தது) ஆகவே சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டார்கள். 32எனவே இராணுவ வீரர்கள் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனாலும் அந்த இராணுவ வீரரில் ஒருவன் இயேசுவின் விலாவில் ஈட்டியினால் குத்தினான். அப்போது இரத்தமும் தண்ணீரும் உடனே வெளியே வந்தன. 35இதை நேரில் பார்த்த ஒருவன் சாட்சி கொடுத்திருக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையானது, தான் சொல்வது உண்மை என்பதும் அவனுக்குத் தெரியும். நீங்களும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கின்றான். 36“அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை”#19:36 யாத். 12:46; எண். 9:12; சங். 34:20 என்று எழுதியிருக்கின்ற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. 37“தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை, அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்”#19:37 சக. 12:10 என்று இன்னொரு வேதவசனமும் சொல்கின்றது.
இயேசுவின் அடக்கம்
38பின்பு, யூதருக்குப் பயந்ததனால் இரகசிய சீடனாயிருந்த, அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். அவன் வந்து, பிலாத்துவின் அனுமதியுடன் இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான். 39அவனுடன் முன்பு ஒருமுறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்த நிக்கொதேமுவும் கூடச் சென்றான். நிக்கொதேமு வரும்போது அகில் தூளும் வெள்ளைப்போளமும்#19:39 வெள்ளைப்போளமும் – கற்றாளை செடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை வாசனைத் தைலம் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது ஏறக்குறைய, முப்பது கிலோ#19:39 முப்பது கிலோ – கிரேக்க மொழியில் 100 லிட்ரா நிறையுடையதாயிருந்தது. 40அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை விலையுயர்ந்த மெல்லிய துணிகளில் வைத்து, உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது. 41இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாயிருந்ததாலும், அக்கல்லறை அருகிலிருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோவான் 19: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.