அப்போஸ்தலருடைய நடபடிகள் 7
7
நியாயசபையின் முன் ஸ்தேவானின் உரை
1அப்போது தலைமை மதகுரு ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?” என்று கேட்டான்.
2அதற்கு அவன் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம், ஆரானிலே வாழ்வதற்கு முன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தபோதே மகிமையின் இறைவன் அங்கே அவருக்குக் காட்சியளித்தார். 3இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உனது நாட்டையும், உனது மக்களையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு வந்திடுவாயாக’#7:3 ஆதி. 12:1 என்றார்.
4“அவ்வாறே அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தார். அவருடைய தகப்பன் இறந்த பின், நீங்கள் இப்போது வாழ்கின்ற இந்த நாட்டிற்கு இறைவன் அவரை குடிபெயர்ந்திடச் செய்தார். 5இங்கே இறைவன் அவருக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச் சொத்தாகக் கொடுக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் ஆபிரகாமுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. ஆனாலும்கூட, அவருக்கும் அவருக்குப் பின் அவருடைய தலைமுறையினருக்கும் இந்த நாட்டை உரிமையாகக் கொடுப்பேன் என இறைவன் வாக்குறுதியளித்தார். 6இறைவன் அவருடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களாய் அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். 7ஆயினும் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணி செய்கின்ற அந்த இனத்தை நான் நியாயம் தீர்ப்பேன்’ என்றும், ‘அதன்பின் அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு வந்து இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’#7:7 ஆதி. 15:13,14 என்றும் கூறினார். 8பின்பு அவர், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, குழந்தை பிறந்து எட்டாம் நாளில் அப்பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்தார். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானார். யாக்கோபு பன்னிரண்டு கோத்திரங்களின் முற்பிதாக்களுக்குத் தகப்பனானார்.
9“கோத்திரங்களின் முற்பிதாக்கள், யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால் அவர்கள் அவரை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, யோசேப்போடு இருந்தார். 10இறைவன் அவருடைய எல்லாத் துன்பங்களில் இருந்தும் அவரைக் காப்பாற்றினார். அவருக்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நன்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே பார்வோன், யோசேப்பை எகிப்தின் மீதும், தனது அரண்மனை முழுவதன் மீதும் ஆளுநராக நியமித்தான்.
11“எகிப்து தேசம் முழுவதையும், கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது. நமது முற்பிதாக்களுக்கும் உணவு கிடைக்கவில்லை. 12எகிப்திலே தானியம் இருக்கின்றது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவர் நமது தந்தையரை முதலாவது பயணமாக அங்கே போகும்படி அனுப்பினார். 13அவர்களது இரண்டாவது பயணத்தின்போது யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு வெளிப்படுத்தினார். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். 14இதன்பின்பு யோசேப்பு தூதனுப்பி, கானான் நாட்டிலிருந்த தனது தகப்பனான யாக்கோபையும் தம்முடைய குடும்பத்தார் அனைவரையும் அழைப்பித்தார். அவர்கள் எல்லாருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். 15இப்படியாக யாக்கோபு எகிப்திற்குப் போனார்; அங்குதான் அவரும், நமது முற்பிதாக்களும் மரணித்தார்கள். 16பிற்காலத்தில்#7:16 பிற்காலத்தில் – நீண்ட கால இடைவெளியின் பின்னர் இது நடந்தது என்பதைக் காட்டவே இச்சொல் சேர்க்கப்பட்டுள்ளது அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கே வெகு காலத்திற்கு முன்பே ஆபிரகாம் வாங்கி வைத்திருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையை ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு, சீகேமில் வாழ்ந்த ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தார்.
17“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய் பெருகியது. 18பின்பு, ‘யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத வேறொருவன், எகிப்திற்கு அரசன் ஆனான்.’#7:18 யாத். 1:8 19அவன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். தங்கள் குழந்தைகளை உயிரிழக்குமாறு எறிந்துவிட வேண்டுமென்று நமது முற்பிதாக்களை பலவந்தப்படுத்தி அவர்களை ஒடுக்கினான்.
20“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தார். அவர் இறைவனுக்கு முன்பாக அழகானதொரு குழந்தையாய் இருந்தார். மூன்று மாதங்களாக அவர் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டார். 21அவர் வெளியே கைவிடப்பட்டபோது பார்வோனின் மகள் அவரை எடுத்து தனது சொந்த மகனாக வளர்த்தாள். 22எனவே மோசே, எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத் தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவராய் இருந்தார்.
23“மோசே நாற்பது வயதுடையவரானபோது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்கத் தன் உள்ளத்தில் தீர்மானித்தார். 24அவர்களில் ஒருவன் ஒரு எகிப்தியனால் அநியாயமாக துன்புறுத்தப்படுவதைக் கண்டார். அப்போது மோசே தாக்கப்பட்டவனை பாதுகாத்து, துன்புறுத்தியவனைப் பழிவாங்கும்படி அந்த எகிப்தியனைக் கொன்றார். 25தன்னுடைய சொந்த மக்களைத் தப்புவிப்பதற்காக, இறைவன் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என மோசே நினைத்தார். ஆனால் அவர்களோ அப்படி புரிந்துகொள்ளவில்லை. 26மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நீங்கள் சகோதரர்கள் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று கூறி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார்.
27“ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவனோ, மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? 28நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொல்லப் பார்க்கின்றாயோ?’#7:28 யாத். 2:14 என்று கேட்டான். 29மோசே இந்த பதிலைக் கேட்டதும், அவர் மீதியானுக்கு ஓடிப் போய், அங்கே ஒரு அந்நியனாக குடியிருந்தார். அங்கே அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
30“நாற்பது ஆண்டுகள் கடந்த பின், எரிந்து கொண்டிருந்த முட்செடியின் நெருப்புச் சுவாலையில் தோன்றிய, ஒரு இறைதூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்திலே நடந்தது. 31மோசே இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தார். அவர் அதை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காக அதன் அருகே சென்றார். அங்கே அவர் கர்த்தரின் குரலைக் கேட்டார். அந்தக் குரல், 32‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினார். அதைப் பார்க்க அவர் துணியவில்லை.
33“அப்போது கர்த்தர் அவரிடம், ‘உனது காலணிகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கின்றது. 34எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய துன்பத்தின் முனகலைக் கேட்டு, அவர்களை விடுதலை செய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்போது நீ வா, நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ என்றார்.
35“இந்த மோசேயைத்தான், ‘எங்கள்மேல் உன்னை ஆளுநராகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ என்று கேட்டு இஸ்ரயேலர்கள் நிராகரித்திருந்தார்கள். இவ்வாறு நிராகரிக்கப்பட்டவரையே அவர்களின் ஆளுநராகவும், மீட்பராகவும் இருக்கும்படி இறைவன் அனுப்பினார். முட்செடியில் இவருக்குக் காட்சியளித்த இறைதூதனானவர் மூலமாய், அவர் இதைச் செய்தார். 36மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் சென்று, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைநிலத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தார்.
37“இப்படிப்பட்ட மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்’#7:37 உபா. 18:15 என்று சொன்னவர். 38இவரே, பாலைநிலத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைதூதனுடனும், நமது முற்பிதாக்களுடனும் இருந்தவர். இவரே நமக்குக் கொடுக்கும்படி, வாழ்வளிக்கும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவர்.
39“ஆனால் நமது முற்பிதாக்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவரை நிராகரித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். 40அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்த மோசேக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ என்றார்கள். 41அக்காலத்திலேதான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்து, அதற்குப் பலிகளைக் கொண்டுவந்தார்கள். தங்கள் கைகளினாலே செய்த அந்தச் சிலையை வைத்துக்கொண்டு அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 42அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு இது ஒத்திருக்கின்றது:
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைநிலத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கா பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்கள்?
43நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித் திரிந்தீர்களே!
இவைகளெல்லாம் நீங்கள் வணங்குவதற்கென செய்துகொண்ட விக்கிரகங்களே!
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தி அனுப்புவேன்.
44“நமது முற்பிதாக்கள் பாலைநிலத்தில், தங்களுடன் சாட்சிக் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவர் பார்த்த மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. 45நமது முற்பிதாக்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின் கீழ், யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது அதைத் தங்களுடன் எடுத்து வந்தார்கள். அந்த இனங்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம், நமது நாட்டில் தாவீதின் காலம் வரைக்கும் இருந்தது. 46தாவீது, இறைவனின் தயவைப் பெற்றவராய் யாக்கோபின் இறைவனுக்கு தான் ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டார். 47ஆயினும் சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினார்.
48“எப்படியும், அதி உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வது போல்,
49“ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
என்று கர்த்தர் சொல்கின்றார்.
மேலும், நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
50இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’
என்கிறார்.
51“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் முற்பிதாக்களைப் போல, எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கின்றவர்களாகவே இருக்கின்றீர்கள்! 52உங்கள் முற்பிதாக்களால் துன்புறுத்தப்படாத இறைவாக்கினர் எவராகிலும் இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்துச் சொன்னவர்களைக்கூட அவர்கள் கொலை செய்தார்களே. இப்போது நீங்களே நீதியானவரைக்#7:52 நீதியானவரை – இயேசுவைக் குறிக்கின்றது காட்டிக் கொடுத்து கொலை செய்தீர்கள். 53இறைதூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை” என்றான்.
ஸ்தேவான் கொலை செய்யப்படல்
54அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். 55ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவனாக, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்கின்றதையும் அவன் கண்டான். 56“இதோ, நான் பரலோகம் திறந்திருப்பதையும், பிதாவின் வலது பக்கத்தில் மனுமகன் நிற்கிறதையும் காண்கின்றேன்” என்றான்.
57இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் காதுகளை பொத்திக் கொண்டு உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப் போய்த் தாக்கினார்கள். 58பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக் கொண்டுபோய், அவன்மீது கல்லெறியத் தொடங்கினார்கள். அப்போது சாட்சிகள், தங்கள் உடைகளை சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள்.
59ஸ்தேவான், “ஆண்டவர் இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்து அவன்மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். 60பின்பு அவன் முழந்தாழிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்த வேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்ன பின்பு, விழுந்து மரணமடைந்தான்.#7:60 மரணமடைந்தான் – கிரேக்க மொழியில் நித்திரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.