அப்போஸ்தலருடைய நடபடிகள் 17
17
தெசலோனிக்கேயாவில் பவுலும் சீலாவும்
1அவர்கள் அம்பிபோலி, அப்பொலோனியா ஆகிய பட்டணங்கள் வழியாக தெசலோனிக்கேயாவை வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு யூத ஜெபஆலயம் இருந்தது. 2பவுல் தனது வழக்கத்தின்படியே அந்த யூத ஜெபஆலயத்திற்குள் போய் அங்கிருந்தவர்களுடன் மூன்று ஓய்வுநாட்களுக்கு வேதவசனத்திலிருந்து விவாதித்தான். 3மேசியா வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும், இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்றும் விளக்கமாய் கூறி அதை நிரூபித்தான். நான் உங்களுக்கு அறிவிக்கின்ற இந்த இயேசுவே மேசியா என்றும் கூறினான். 4சில யூதர்கள் இதை ஏற்றுக்கொண்டு, பவுலுடனும் சீலாவுடனும் சேர்ந்து கொண்டார்கள். அப்படியே, இறைவனுக்குப் பயந்த பெரும் எண்ணிக்கையான கிரேக்கரும், உயர் அந்தஸ்துடைய பெண்கள் பலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
5ஆனால் மற்ற யூதர்களோ பொறாமைகொண்டு, சந்தை கூடும் இடங்களில் நிற்கும் சில பொல்லாத மனிதர்களின் உதவியுடன் ஒரு கலகக் குழுவை உருவாக்கி, பட்டணத்தில் குழப்பம் விளைவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் மக்கள் கூட்டத்திற்கு முன் கொண்டுவருவதற்காக, அவர்களைத் தேடி யாசோனுடைய வீட்டிற்கு விரைந்து ஓடினார்கள். 6ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அவர்கள் யாசோனையும், வேறு சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாக இழுத்து வந்து, “உலகம் முழுவதிலும் கலகத்தை உண்டாக்குகின்ற இந்த மனிதர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள். 7யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வரவேற்றிருக்கிறான். அவர்கள் இயேசு என்னும் வேறொரு அரசன் இருப்பதாகக் கூறி, சீசரின் சட்ட ஒழுங்குகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். 8கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது மிகவும் குழப்பமடைந்தார்கள். 9பின்பு அவர்கள், யாசோனையும் மற்றவர்களையும் பிணையில் போகவிட்டார்கள்.
பெரோயாவில் பவுலும் சீலாவும்
10அன்று இரவே சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, யூத ஜெபஆலயத்திற்குப் போனார்கள். 11பெரோயா பட்டணத்தைச் சேர்ந்தவர்கள், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்தவர்களைவிட சிறந்த குணமுடையவர்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு பவுல் சொன்னது உண்மைதானோ எனக் கண்டறிவதற்கு ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். 12அநேக யூதர்கள் விசுவாசித்தார்கள், அப்படியே பெருந்தொகையான உயர் அந்தஸ்துடைய கிரேக்கப் பெண்களும், அநேக கிரேக்க ஆண்களும் விசுவாசித்தார்கள்.
13பவுல், பெரோயாவில் இறைவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கிறான் என தெசலோனிக்கேயாவிலுள்ள யூதர்கள் அறிந்தபோது அவர்கள் அங்கேயும் போய் மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிட்டார்கள். 14உடனே சகோதரர்கள் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள். 15பவுலை அழைத்துக்கொண்டு போனவர்கள் அத்தேனே பட்டணம் வரைக்கும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது, சீலாவும் தீமோத்தேயுவும் கூடிய விரைவில் தன்னிடம் வந்து சேர்ந்துகொள்ள வேண்டும் என்று பவுல் சொல்லி அனுப்பிய செய்தியைக் கொண்டுபோனார்கள்.
அத்தேனேயில் பவுல்
16பவுல் அவர்களுக்காக அத்தேனே பட்டணத்தில் காத்திருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு மிகவும் மனம் குமுறினான். 17எனவே அவன் ஜெபஆலயத்திலுள்ள யூதர்களுடனும், இறைவனுக்குப் பயந்து நடந்த கிரேக்கருடனும் விவாதித்தான். அத்துடன் ஒவ்வொரு நாளும் சந்தை கூடும் இடத்தில், அங்கு வருகின்றவர்களுடன் விவாதித்தான். 18எப்பிக்கூர், ஸ்தோயிக்கர் எனப்பட்ட சில தத்துவஞானிகள் பவுலுடன் விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், “இந்த வாயாடி என்ன சொல்ல விரும்புகிறான்?” என்றார்கள். மற்றவர்கள், “இவன் வேறு தெய்வங்களைப்பற்றி அறிவிக்கிறான் போலும்” என்றார்கள். பவுல் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்ததனால், அவர்கள் இப்படிச் சொன்னார்கள். 19எனவே அவர்கள் அவனை அரியோப்பாகு என்னும் மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு அழைத்து வந்து, “நீ போதிக்கின்ற இந்த புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா? 20நீ எங்களுக்கு சில விசித்திரமான கருத்துக்களைக் கொண்டுவந்திருக்கிறாய். எனவே, அவற்றின் அர்த்தம் என்ன என்று அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். 21அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு வாழ்கின்ற வேறு நாட்டவர்களும் வேறொன்றும் செய்யாமல் ஏதாவது புதிதான சிந்தனைகளைக் கேட்பதிலும், சொல்வதிலுமே தங்களுடைய நேரத்தைக் கழிப்பவர்கள்.
22எனவே, பவுல் அரியோப்பாகு மன்றத்தில் எழுந்து நின்று சொன்னதாவது: “அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த மனிதரே! எல்லாவிதத்திலும் நீங்கள் சமய பக்தி உள்ளவர்கள் என்றே நான் காண்கின்றேன். 23ஏனெனில் நான் பட்டணத்தின் வழியாக நடந்து போகையில், நீங்கள் வணங்கியவைகளை கவனமாய்ப் பார்த்தேன். அப்போது அவைகளின் நடுவே, நான் ஒரு பலிபீடத்தைக் கண்டேன். அதில்,
‘நாம் அறியாத ஒரு தெய்வத்துக்கு’ என எழுதப்பட்டிருந்தது.
எனவே நீங்கள் அறியாமல் ஆராதிப்பதையே, நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன்.
24“உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவனே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராய் இருக்கின்றார். அவர் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் வாழ்கின்றவர் அல்ல. 25அவருக்கு எவ்வித தேவையும் இல்லாதிருப்பதனால், மனித கைகளினால் செய்யப்படும் பணி அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவரே எல்லா மனிதருக்கும் உயிரையும், சுவாசத்தையும், தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றார். 26அவர் ஒரு மனிதனில் இருந்தே எல்லா மனித இனங்களையும் படைத்து, அவர்களை பூமி முழுவதிலும் குடியிருக்கச் செய்தார். அவர்களுக்குரிய காலங்களையும், அவர்கள் வாழ வேண்டிய இடங்களையும் அவரே தீர்மானித்து, 27மனிதர்கள் தன்னை நாடித் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கின்றார். இப்படி தட்டுத் தடுமாறியேனும் தன்னை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆனாலும் நம்மில் ஒருவருக்கும் அவர் தூரமாய் இருப்பவர் அல்ல. 28ஏனெனில், ‘நாம் அவரிலேயே வாழ்கின்றோம், அவரிலேயே செயல்படுகின்றோம், அவரிலேயே இருக்கின்றோம். உங்கள் புலவர்களில் சிலர் சொன்னது போல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம்.’
29“எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், அவர் மனிதனின் சிந்தனையினாலும் திறமையினாலும் வடிவமைக்கப்பட்டதான தங்கம், வெள்ளி மற்றும் கல்லால் செய்யப்பட்ட உருவத்துக்கு ஒப்பானவர் என நாம் எண்ணக் கூடாது. 30கடந்த காலத்தில் இப்படிப்பட்ட அறியாமையை இறைவன் பொருட்படுத்தவில்லை; ஆனால் இப்பொழுதோ எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மக்களும் மனந்திரும்ப வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். 31ஏனெனில், இறைவன் தாமே உலகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பதற்கு ஒரு நாளை நியமித்திருக்கிறார். நியாயத்தீர்ப்பை வழங்குபவரையும் அவர் நியமித்திருக்கிறார். அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலமாக அவர் எல்லா மனிதருக்கும் இதை நிரூபித்துக் காட்டியுமிருக்கிறார்” என்றான்.
32இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபோது, அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்களோ, “இதைக் குறித்து நீ சொல்வதை நாங்கள் திரும்பவும் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள். 33அப்போது பவுல், அந்த மன்றத்தைவிட்டுச் சென்றான். 34சிலர் பவுலைப் பின்பற்றி விசுவாசிகளானார்கள். அவர்களில் அரியோப்பாகு மன்றத்தின் அங்கத்தவனான தீயோனீசியு எனப்பட்ட ஒருவன் இருந்தான். தாமரி என்னும் பெயருடைய ஒரு பெண்ணும், இன்னும் வேறு சிலரும் இருந்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.