அப்போஸ்தலருடைய நடபடிகள் 14
14
இக்கோனியாவில் பவுலும் பர்னபாவும்
1பவுலும் பர்னபாவும் தமது வழக்கப்படியே, இக்கோனியாவிலும் யூத ஜெபஆலயத்திற்குப் போனார்கள். அங்கே அவர்கள் மிகுந்த ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதர்களும் கிரேக்கர்களும் விசுவாசித்தார்கள். 2ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதரோ, யூதரல்லாத மக்களைத் தூண்டி சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனங்களைக் கெடுத்தார்கள். 3ஆயினும் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு பல நாட்களை அங்கே கழித்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார். 4அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள். சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலர்களின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள். 5பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும் அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதர்களும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். 6ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள். 7அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார்கள்.
லீஸ்திராவிலும் தெர்பையிலும் பவுலும் பர்னபாவும்
8லீஸ்திராவிலே, கால் ஊனமுற்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் பிறப்பிலேயே ஊனமுற்றிருந்ததால், ஒருபோதும் எழுந்து நடந்ததே இல்லை. 9பவுல் பேசிக் கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பவுல் அவனை உற்று நோக்கி அவனுக்குக் குணம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கின்றது என்று கண்டான். 10எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். உடனே அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
11கூடியிருந்தவர்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள். 12அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான சீயஸ் என்றும், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றும் அழைத்தார்கள். 13அப்போது பட்டணத்திற்கு வெளியே இருந்த சீயஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த மதகுரு, காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள்.
14அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்து, தங்கள் உடைகளைக் கிழித்து, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள். 15“நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்தப் பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, உயிருள்ள இறைவனிடம் திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கின்றோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர். 16கடந்த காலத்தில் அவர் எல்லா இன மக்களையும் தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார். 17ஆயினும், அவர் தம்மைக் குறித்த எந்த ஒரு சான்றும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவ காலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையைக் காண்பித்திருக்கிறார். அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள். 18இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
19அப்போது அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் பவுலின் மேல் கல்லெறிந்து, அதனால் அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். 20ஆனால் சீடர்கள் வந்து அவனைச் சுற்றி நின்றபோது, அவன் எழுந்து திரும்பவும் பட்டணத்திற்குள் சென்றான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குப் போனார்கள்.
அந்தியோகியாவில் பவுல்
21பவுலும் பர்னபாவும் அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிப் போனார்கள். 22அங்கே அவர்கள் சீடர்களைப் பலப்படுத்தி, “இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க, நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்று சொல்லி விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். 23பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களை நியமித்து, உபவாசத்துடன் மன்றாடி, தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த கர்த்தருக்கு அந்த மூப்பர்களை ஒப்புவித்தார்கள். 24அவர்கள் பிசீதியா வழியாகப் போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள். 25அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
26அவர்கள் அத்தலியாவிலிருந்து கப்பல் மூலமாக அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பணி செய்யத் தொடங்க முன் இங்கேதான் இறைவனுடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். இப்போது அதை நிறைவேற்றி முடித்தவர்களாக திரும்பி வந்திருந்தார்கள். 27அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். இறைவன் எவ்விதமாக விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். 28அங்கே அவர்கள் அதிக நாட்கள் சீடர்களுடனே தங்கினார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.