2 தீமோத்தேயு 1

1
1கிறிஸ்து இயேசுவில் உள்ள வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கின்ற பவுல்,
2எனது அன்பு மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுவதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும், நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவினிடமிருந்தும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதல்
3இரவும் பகலும் எனது மன்றாடுதலில் இடைவிடாமல் உன்னை நினைத்து, என் முற்பிதாக்களைப் போல சுத்த மனசாட்சியுடன், நான் பணி செய்யும் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 4நீ கண்ணீர் சிந்தியதை நான் நினைவில்கொள்ளும்போது, உன்னைக் கண்டு நான் மனமகிழ்ச்சியடையும்படி மிகுந்த ஆவலாய் இருக்கின்றேன். 5உனது உண்மையான விசுவாசம் என் நினைவில் வருகின்றது. இத்தகைய விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்போது உன்னிடத்திலும் இருக்கின்றது என நம்புகிறேன்.
நற்செய்திக்கு உண்மையாயிருத்தல்
6இக் காரணத்தினாலேயே, உனது மேல் நான் எனது கைகளை வைத்தபோது உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி உனக்கு நினைவூட்டுகிறேன். 7ஏனெனில், இறைவன் நமக்குப் பயப்படுகின்ற#1:7 பயப்படுகின்ற – கோழைத்தனம் என்றும் மொழிபெயர்க்கலாம். சுபாவத்தைக்#1:7 சுபாவத்தை – கிரேக்க மொழியில் ஆவி கொடுக்கவில்லை. வல்லமையும், அன்பும், சுய ஒழுக்கமும் உள்ள சுபாவத்தையே தந்திருக்கிறார்.
8எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்வதற்கோ, அவருக்காகக் கைதியாக இருக்கும் என்னைக் குறித்தோ வெட்கப்படாதே. இறைவனின் வல்லமையில் சார்ந்திருந்து, நற்செய்திக்காகத் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் பங்குகொள். 9அவரது சொந்த நோக்கத்தின் பொருட்டும் கிருபையின் பொருட்டும் அவர் நம்மை மீட்டெடுத்து பரிசுத்தமான ஒரு வாழ்வுக்கு அழைத்தாரேயன்றி, ஏதோ நாம் செய்த நல்ல செயல்களின் காரணமாக அல்ல. இந்த கிருபையானது யுகங்கள் உருவாகும் முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டது. 10ஆனால் இப்பொழுதோ அந்த கிருபையானது நமது மீட்பராகிய கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியின் மூலமாக வாழ்வையும் அழிவில்லாத் தன்மையையும் அறியச் செய்திருக்கின்றார். 11இந்த நற்செய்திக்காகவே, பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் ஆசிரியனாகவும் நான் நியமிக்கப்பட்டேன். 12இதன் காரணமாகவே இப்படியாகத் துன்பங்களை அனுபவித்து வருகின்றேன். ஆனால் அதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனெனில் நான் விசுவாசிக்கின்ற அவரை#1:12 அவரை என்பது கிறிஸ்து இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்படைத்திருப்பதை, அவர் மீண்டும் வரவிருக்கும் நாள்வரை#1:12 வரவிருக்கும் நாள்வரை – கிரேக்க மொழியில் அந்த நாள்வரை பாதுகாப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
13என்னிடமிருந்து நீ கேட்ட நலமான போதனைகளை மாதிரி வழிமுறையாக வைத்து, அதை கிறிஸ்து இயேசுவில் கொண்டுள்ள விசுவாசத்துடனும் அன்புடனும் பற்றிப் பிடித்துக்கொள். 14உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள்.
உண்மைத்துவம் உள்ளவர்களும் உண்மைத்துவம் அற்றவர்களும்
15ஆசியா பகுதியிலுள்ள பிகெல்லுவும், எர்மொகெனேயும் உட்பட அனைவரும் என்னைவிட்டு விலகிப் போனது உனக்குத் தெரியுமே.
16ஒநேசிப்போருவின் குடும்பத்திற்குக் கர்த்தர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில் அவன் அடிக்கடி எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டினான். நான் விலங்கிடப்பட்டிருப்பதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை. 17அத்துடன் அவன் ரோம் நகரத்திற்கு வந்திருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும் வரை அதிக முயற்சி எடுத்துத் தேடினான். 18இறுதி நியாயத்தீர்ப்பின் நாளிலே#1:18 நாளிலே – கிரேக்க மொழியில் அந்த நாளில் என்றுள்ளது., கர்த்தரிடத்திலிருந்து அவன் இரக்கத்தைப் பெறுவதற்கு கர்த்தர் அவனுக்கு உதவி செய்வாராக! அவன் எபேசுவிலே எனக்கு எந்தளவு உதவி செய்தான் என்பது உனக்கு மிக நன்றாகத் தெரியும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 தீமோத்தேயு 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்