2 கொரி 5

5
நமது பரலோகக் குடியிருப்பு
1நாம் வாழ்கின்ற தற்காலிக வீடாகிய இந்த பூமிக்குரிய கூடாரம் அழிக்கப்பட்டாலும், நமக்கு இறைவன் அளிக்கின்ற கட்டடமாகிய நித்திய வீடொன்று உண்டு. அது மனித கைகளால் கட்டப்படாததும், பரலோகத்தில் உள்ளதுமாக இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறோம். 2அதேநேரம், பரலோக வீட்டை அணிந்துகொள்ளும் ஏக்கத்துடன் இந்த கூடாரத்திலிருந்து தவிக்கிறோம். 3அவ்விதம் அணிந்து கொண்டோமானால், ஆடையற்றவர்களாய் காணப்பட மாட்டோம். 4இந்தக் கூடாரத்தில் இருக்கும் வரையில் ஏங்கித் தவிக்கிறோம். ஏனென்றால், இந்த ஆடையை களைந்துவிட வேண்டுமென்பதற்காக அல்ல, பரலோகக் குடியிருப்புக்குரிய ஆடையை அணிந்துகொள்ளவே விரும்புகிறோம். அப்போது மரணத்துக்குரியது வாழ்வினால் உள்வாங்கப்படும். 5இந்த முக்கிய நோக்கத்திற்காகவே இறைவன் எங்களை உண்டாக்கி, ஆவியானவரை உத்தரவாதமாய் எங்களுக்குத் தந்திருக்கிறார்.
6ஆகையால் நாம் எப்போதும் மனத்தைரியத்தோடு இருப்பதுடன், உடலாகிய இந்த வீட்டில் குடியிருக்கும் வரை, கர்த்தரிடமிருந்து தொலைவில் இருக்கின்றோம் என்பதையும் அறிந்திருக்கின்றோம். 7ஏனெனில், நாம் கண்டு நடவாமல் விசுவாசித்து நடக்கின்றோம். 8நாங்கள் மனத்தைரியத்துடனேயே இருக்கின்றோம். இந்த உடலைவிட்டு அகன்று, கர்த்தரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். 9எனவே நாங்கள் இந்த உடலில் குடியிருந்தாலும் அல்லது அகன்று போனாலும், அவருக்கு பிரியமாய் இருப்பதே எங்கள் நோக்கமாகும். 10ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையோ தீமையோ, அதற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்ளும்படி, நாம் எல்லோரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்க வேண்டும்.
ஒப்புரவாக்கும் ஊழியம்
11ஆகவே கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்னவென்பதை நாங்கள் அறிந்திருப்பதால், மனிதர்கள் மனந்திரும்பும்படியான பெருமுயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். இறைவன் எங்களை நன்கு அறிவார். அது உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். 12நாங்கள் மறுபடியும் உங்களுக்கு முன்பாக எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்களைக் குறித்து பெருமிதம்கொள்ள சந்தர்ப்பத்தையே உருவாக்குகிறோம். அப்போது இருதயத்தைப் பாராமல் வெளித் தோற்றத்தைக் குறித்துப் பெருமைப்படுபவர்களுக்கு உங்களால் தகுந்த பதில் கொடுக்க முடியும். 13நாங்கள் புத்தி சுவாதீனமற்றவர்கள் போன்று இருந்தாலும், இறைவனுக்காகவே அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனமுடையவர்களாக இருக்கின்றோம் என்றாலும், உங்களுக்காகவே அப்படியிருக்கிறோம். 14நம் எல்லோருக்காகவும் ஒருவர்#5:14 ஒருவர் – கிறிஸ்து மரணித்தபடியால் நாம் எல்லோருமே மரணித்திருக்கின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம். அதனால் கிறிஸ்துவின் அன்பு எங்களை கட்டுப்படுத்தி ஆட்கொள்கின்றது. 15அத்துடன், அவர் எல்லோருக்காகவும் மரணத்தைத் தழுவியதால், வாழ்கின்றவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக மரணித்து மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளோம்.
16எனவே, இனிமேலும் ஒருவரையும் நாம் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிடுவதில்லை. முன்பு கிறிஸ்துவையும் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிட்டிருந்தாலும், இனி அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை. 17இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய படைப்பாய் இருக்கின்றான். இதோ பழையவை கடந்துபோக, புதியது தோன்றிற்று. 18இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகின்றன. அவரே கிறிஸ்துவின் மூலமாய் எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்: 19அதாவது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கிடாமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்கும் செய்தியை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். 20நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருக்கின்றபடியால், இறைவன் எங்கள் மூலமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றபடி, இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். 21பாவமே இல்லாதவரை இறைவன் நமக்காகப் பாவமாக்கினார். நாம் அவரில் இறைவனின் நீதியாகும்படியாகவே இப்படிச் செய்தார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 5: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்