1 தெசலோனிக்கேயர் 4
4
இறைவனைப் பிரியப்படுத்தும் வாழ்வு
1பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையிலே நீங்கள் அந்தவிதமாகவே வாழ்ந்து வருகின்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் பெயராலே நாம் இப்போது உங்களிடம் கேட்பதும் வேண்டிக்கொள்வதும் என்னவென்றால், இன்னும் அதிகம் அதிகமாய் அதைக் கடைப்பிடியுங்கள். 2ஆண்டவர் இயேசுவின் அதிகாரத்தின் கீழே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அந்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும்.
3நீங்கள் பரிசுத்தமாய்#4:3 பரிசுத்தமாய் – இது இறைவனால் தூய்மையாக்கப்பட்ட நிலையைக் குறிக்கின்றது. இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். நீங்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டைத் தவிர்த்து, 4ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாகவும் மதிப்புக்குரியதாகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க அறிந்திருக்க வேண்டும். 5இறைவனை அறியாத யூதர் அல்லாதவர்களைப் போல, கட்டுக்கடங்காத காம வேட்கைகொள்ளக் கூடாது; 6இந்த விடயத்தில் எவரும் தன் சகோதரனுக்கோ சகோதரிக்கோ தவறிழைத்து ஏமாற்றி, அவர்களைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. நாங்கள் முன்னரே உங்களுக்கு சொல்லி எச்சரித்தபடி, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் அனைவரையும் கர்த்தர் தண்டிப்பார். 7ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் வாழ்வதற்கு அல்ல, பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார். 8ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அன்றி, தம்முடைய பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கின்ற இறைவனையே புறக்கணிக்கிறான்.
9மேலும், சகோதர அன்பைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை. ஏனெனில் ஒருவர் மீது ஒருவர் அன்பாய் இருப்பதைக் குறித்து, நீங்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறீர்களே. 10உண்மையில் மக்கெதோனியா எங்கும் இருக்கின்ற சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அன்பு காட்டுகிறீர்கள். ஆனால், பிரியமானவர்களே, நீங்கள் அதை இன்னும் அதிகமாய்ச் செய்ய வேண்டும் என உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
11நாங்கள் உங்களுக்கு சொன்னது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதை உங்கள் குறிக்கோளாகக் கொண்டவர்களாகவும், உங்களுடைய சொந்த காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், உங்கள் கைகளினால் உழைத்து வேலை செய்கின்றவர்களாகவும் இருங்கள். 12அப்போது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வெளியாட்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டியதில்லை.
ஆண்டவரின் வருகை
13பிரியமானவர்களே, மரணம்#4:13 இந்த பகுதியில் காணப்படும் மரணம் என்ற சொல்லானது, கிரேக்க மொழியில் நித்திரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடைகின்றவர்களைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்போது, எதிர்பார்ப்பு அற்ற மற்றவர்களைப் போல நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள். 14இயேசு மரணித்து, உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கின்றோமே. அப்படியே, இயேசுவில் நம்பிக்கை வைத்தவர்களாய் மரணம் அடைந்தவர்களையும் இறைவன் அவருடனேகூட அழைத்து வருவார் என்றும் விசுவாசிக்கின்றோம். 15கர்த்தருடைய வார்த்தையின்படி நாங்கள் உங்களுக்குச் சொல்வதாவது, ஆண்டவருடைய வருகை வரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாம், மரணம் அடைந்தவர்களுக்கு முன்பதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது உறுதி. 16ஏனெனில் ஆண்டவர் தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் சத்தமான கட்டளை முழக்கத்துடன், பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, இறைவனுடைய எக்காள பேரிகை அழைப்புடன் வருவார். அப்போது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். 17அதன்பின்பு நம்மில் அதுவரை உயிரோடிருப்பவர்கள் ஆகாயத்திலே ஆண்டவரைச் சந்திப்பதற்காக, அவர்களுடனே மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக நாம் என்றென்றும் ஆண்டவருடனேயே இருப்போம். 18ஆகவே, இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 தெசலோனிக்கேயர் 4: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.