1 கொரிந்தியர் 8
8
பலியிடப்பட்ட உணவு
1இப்போது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைக் குறித்துப் பார்ப்போம். “நம் அனைவருக்கும் அறிவு உண்டு என்று” நமக்குத் தெரியும். இந்த அறிவு அகந்தையை ஏற்படுத்தும், ஆனால் அன்போ கட்டியெழுப்பச் செய்யும். 2தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறிய வேண்டியவிதத்தில் இன்னும் அதை அறியவில்லை. 3ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகின்றவனை இறைவன் அறிவார்.
4எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதைப்பற்றி பார்ப்போம். “உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை,” இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை நாம் அறிவோம். 5சிலரது எண்ணத்தின்படி, வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை பல உள்ளன. அதன்படி அவர்களுக்கு அநேக தெய்வங்களும் ஆள்பவைகளும் இருந்தாலும், 6நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கின்றோம். நமக்கு இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆண்டவர் இருக்கின்றார். அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கின்றோம்.
7ஆனால் எல்லோருக்கும் இந்த அறிவில்லை. சிலர் தாம் முன்பு வழிபட்ட விக்கிரகத்தை ஒரு பொருட்டாக எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவை உண்கிறோமே என்ற பலவீனமான மனசாட்சியுடன் உண்ணும்போது அவர்களது மனசாட்சி அசுத்தமாகிறது. 8உணவு எதுவுமே நாம் இறைவனை நெருங்க உதவுவதில்லை. அதை நாம் உண்ணாமல் விடுவதால் எதையும் இழந்து போவதில்லை. உண்பதால் நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை.
9ஆனாலும், உங்களுடைய சுயஅறிவால் தீர்மானிக்கும் உரிமை பலவீனருக்கு தடங்கலாய் இராதபடி கவனமாயிருங்கள். 10இப்படிப்பட்ட அறிவுள்ளவனாகிய நீ, விக்கிரக கோவிலில் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால் அவனும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்குத் துணிவான் அல்லவா? 11உன்னுடைய மிகையான அறிவின் காரணமாக பலவீனமான அந்த சகோதரன் அழிந்து போகலாம். கிறிஸ்து அவனுக்காகவும் மரணித்தாரே. 12இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சியைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்கின்றாய். 13ஆகையால் நான் உண்ணும் உணவு என் சகோதரன் பாவம் செய்வதற்கு காரணமாக இருக்குமானால், நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இராதவாறு நான் மாமிச உணவே உண்ணாமல் இருக்கவும் தயார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 கொரிந்தியர் 8: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.