1 கொரிந்தியர் 15

15
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
1இப்போதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள். 2நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில் நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்.
3நான் பெற்றுக்கொண்டவைகளும் மிக முக்கியமானவை என்பதால் உங்களுக்கு ஒப்படைத்தவைகளும் எவையெனில் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடியே கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரணித்தார் என்பதும், 4அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும், வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதும், 5கேபாவுக்கு காட்சியளித்தார் என்பதும், பின்பு பன்னிரண்டு பேருக்குக் காட்சியளித்தார் என்பதுமே ஆகும். 6அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கு காட்சியளித்தார். அவர்களில் சிலர் மரணித்தாலும்,#15:6 மரணித்தாலும் – நித்திரையடைந்தாலும் என்றும் மொழிபெயர்க்கலாம் பலர் இன்னும் உயிருடனே இருக்கின்றார்கள். 7பின்பு அவர் யாக்கோபுக்கும் அதற்குப் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். 8இறுதியாக, குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கின்ற எனக்கும் காட்சியளித்தார்.
9ஏனெனில், அப்போஸ்தலர்களில் நான் மிகக் குறைந்தவன். இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படவும் தகுதியற்றவன். 10ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே நான் இப்போது இந்நிலையில் இருக்கின்றேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. நான் மற்ற எல்லோரையும்விட அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அதை செய்தது நான் அல்ல, என்னோடிருக்கும் இறைவனுடைய கிருபையே அதைச் செய்தது. 11எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
இறந்தோரின் உயிர்த்தெழுதல்
12இறந்தோரிலிருந்து கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்த மனிதர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? 13இறந்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. 14கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண், உங்கள் விசுவாசமும் வீணானது. 15அதுவுமல்லாமல், இறந்தோர் உயிரோடு எழுப்பப்படுவது இல்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பவில்லை. எனவே இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் கூறுகின்ற சாட்சி இறைவனைப் பற்றிய பொய்ச் சாட்சியாய் காணப்படுமே. 16இறந்தோர் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. 17கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கின்றீர்கள். 18அப்படியானால் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும்#15:18 கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் – கிறிஸ்துவுக்குள் மரணித்தவர்கள் என்றும் மொழிபெயர்க்கலாம் அழிந்து போனவர்களாய் இருப்பார்களே! 19இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாய் இருப்போம்.
20மெய்யாகவே கிறிஸ்து மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, நித்திரை அடைந்தவர்களில்#15:20 நித்திரை அடைந்தவர்களில் என்பதற்கு மரணித்தவர்களில் என்று அர்த்தம் முதற் பலனானார். 21ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வந்தது. 22ஆதாமுக்குள் எல்லோரும் இறப்பதைப் போலவே கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள். கிறிஸ்துவே முதற்பலன். அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். 24கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் அழித்து பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். அப்போது முடிவு வரும். 25எனவே, இறைவன் எல்லாப் பகைவர்களையும் வெற்றிகொண்டு கிறிஸ்துவினுடைய கால்களின் கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்ய வேண்டும். 26அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன் மரணமே. 27ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்”#15:27 சங். 8:6 என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார். 28இறைவன் இவற்றையெல்லாம் செய்த பின்பு அவருடைய மகனாகிய கிறிஸ்துவும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்திய அவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.
29உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றவர்கள் என்ன செய்வார்கள்? மரணித்தவர்கள் ஒருபோதுமே உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் மரணித்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றார்கள்? 30நாங்களும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் உயிரைப் பணயம் வைக்கிறோம்? 31நான் தினமும் மரண ஆபத்தைச் சந்திக்கிறேன். இதை நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில், உங்கள் மீது பெருமை பாராட்டுகிற நான் உண்மையாகச் சொல்கின்றேன். 32எபேசுவிலே நான் கொடிய மிருகங்களோடு#15:32 கொடிய மிருகங்களோடு என்பது நற்செய்திக்கு எதிரான பலம் வாய்ந்த எதிரிகள். போராடினேனே, நான் உலக நோக்கத்திற்காக மட்டுமே போராடியிருந்தால் எனக்குக் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால்
“நாம் நாளை இறந்து போகப் போகின்றோமே,
எனவே நாம் உண்டு குடித்து வாழ்வோம்”#15:32 சங். 22:13
என்று இருந்திருக்கலாம்.
33ஏமாந்து போக வேண்டாம்: “கெட்ட சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” 34ஆகவே, புத்தியாய் நடவுங்கள். பாவம் செய்வதை நிறுத்துங்கள். உங்களில் சிலர் இறைவனைப் பற்றிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கின்றார்கள். உங்களுக்கு வெட்கம் ஏற்படவே இதைச் சொல்கின்றேன்.
உயிர்த்தெழுந்த உடல்
35ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். 36மதியற்ற மனிதா, நீ விதைக்கிறது இறக்காவிட்டால் அது உயிர் பெற்று அதிலிருந்து முளை வராதே. 37நீங்கள் விதைக்கும்போது வளரவிருக்கும் பயிரின் தண்டை விதைக்காமல் வெறும் விதையை, அதாவது கோதுமை மணியை அல்லது வேறு தானியத்தை அல்லவா விதைக்கிறீர்கள். 38ஆனால் இறைவன் தாம் தீர்மானித்தபடி, அதற்கு ஒரு உடலுருவம் கொடுக்கின்றார். ஒவ்வொரு விதைக்கும், அதற்குரிய பயிரை உடலாகக் கொடுக்கின்றார். 39உயிரினங்களது உடலின் தன்மை அனைத்தும் ஒரே விதமானவை அல்ல, மனித உடலின் தன்மை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும் பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் உள்ளது. 40வானுலக உடல்கள் உண்டு, பூவுலக உடல்களும் உண்டு. வானுலக உடல்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உடல்களின் சிறப்பு இன்னொரு விதமானது. 41சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது, நட்சத்திரங்களிலும் அதன் சிறப்பு ஒன்றுக்கொன்று வேறுபடுகிறது.
42எனவே இறந்தவர்களின் உயிர்த்தெழுதலிலும் இவ்விதமாகவே இருக்கும். மரண அடக்கத்தில் விதைக்கப்படும் உடலானது அழிவுக்குரியது, எழுப்பப்படும் போதோ#15:42 எழுப்பப்படும் போதோ – அதாவது மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்படுதல். அது அழியாததாய் இருக்கும். 43அது மதிப்பற்றதாய் விதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் விதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. 44அது இயல்பான மனித உடலாய் விதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது.
இயல்பான உடல் இருக்கின்றதே, அதுபோலவே ஆவிக்குரிய உடலும் இருக்கின்றது. 45எனவேதான் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ள ஒரு மனிதன் ஆனான்.”#15:45 ஆதி. 2:7 கடைசி ஆதாமோ, உயிர் கொடுக்கும் ஆவி ஆனார். 46ஆனாலும் ஆவிக்குரியது முதலில் வரவில்லை, இயல்புக்குரியதே முதலில் வந்தது. இயல்புக்குரியதற்குப் பின்னரே ஆவிக்குரியது வந்தது. 47முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ பரலோகத்திலிருந்து வந்தவர். 48பூமியின் மனிதனைப் போலவே பூமியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே பரலோகத்துக்குரியவர்களும் இருக்கின்றார்கள். 49நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருப்பது போலவே பரலோகத்திற்குரிய மனிதனின்#15:49 பரலோகத்திற்குரிய மனிதனின் என்பது இங்கே இயேசுவைக் குறிக்கின்றது. தன்மையையும் பெறுவோம்.
50பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கின்றதாவது: சரீரமும், இரத்தமும்#15:50 சரீரமும், இரத்தமும் என்பது இயல்பான மனிதனைக் குறிக்கிறது. இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. 51கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு மறைபொருளை வெளிப்படுத்துகிறேன். நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. மாறாக, நாம் எல்லோரும் உருமாற்றமடைவோம். 52கடைசி எக்காளம் தொனிக்கும்போது முன்பு மரணித்தவர்கள், கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் அழிவற்றவர்களாய் எழுப்பப்படுவார்கள். அப்போது நாமும்#15:52 நாமும் என்பது மரண நித்திரையடையாதவர்கள் உருமாற்றமடைவோம். 53ஏனெனில் அழிவுக்குரிய உடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும். மரணிக்கும் தன்மையுடையது மரணிக்காத நிலையை அணிந்துகொள்ள வேண்டும். 54அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், மரணத்துக்குரியது மரணிக்காத நிலையை அணிந்துகொள்ளும்போதும், “மரணம் வெற்றிக்குள் அடக்கப்பட்டது”#15:54 ஏசா. 25:8 என்று எழுதப்பட்ட வசனம் நிறைவேறும்.
55“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே,
உன் விஷக் கொடுக்கு எங்கே?”#15:55 ஓசி. 13:14
56மரணத்தின் விஷக் கொடுக்கு பாவம். பாவத்தின் வல்லமை நீதிச்சட்டம். 57ஆனால், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெற்றியைக் கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி.
58ஆகவே பிரியமானவர்களே! ஆண்டவரில் உங்கள் உழைப்பு வீணாகப் போகாதபடி, அசையாமல் உறுதியாய் நின்று ஆண்டவருடைய பணிக்கு உங்களை முற்றிலும் ஒப்புக்கொடுங்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 கொரிந்தியர் 15: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்