சங்கீத புத்தகம் 9:1-12

சங்கீத புத்தகம் 9:1-12 TAERV

என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன். நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன். என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள். நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர். கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர். எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர். பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர். உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர். பகைவன் ஒழிக்கப்பட்டான்! கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன. அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை. ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார். கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார். உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார். உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார். பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர். அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும். உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர். சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள். கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள். உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார். அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர். கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.