சங்கீத புத்தகம் 56

56
“தூரத்து ஓக் மரத்தின் புறா” என்னும் இசையில் வாசிக்க இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்ற பாடல். பெலிஸ்தர் தாவீதை காத் என்னும் இடத்தில் பிடித்தபோது பாடியது.
1தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும்.
அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
2என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள்.
என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள்.
3நான் அஞ்சும்போது,
உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
4நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
5என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள்.
6என்னைக் கொல்லும் வகைதேடி,
அவர்கள் ஒருமித்து ஒளிந்திருந்து என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்கள்.
7தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும்.
அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும்.
8என் வருத்தத்தை நீர் அறிகிறீர்.
என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர்.
என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.
9எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும்.
நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!
10தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் எனக்களித்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
11நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன்.
ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
12தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன்.
நான் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
என் ஸ்தோத்திரபலியை உமக்குச் செலுத்துவேன்.
13ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர்.
பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர்.
எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன்.
அதை ஜீவனுள்ளோர் மட்டும் பார்க்க முடியும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீத புத்தகம் 56: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்