சங்கீத புத்தகம் 28

28
தாவீதின் ஒரு பாடல்.
1கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீத புத்தகம் 28: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்