சங்கீத புத்தகம் 119:1-16

சங்கீத புத்தகம் 119:1-16 TAERV

பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர். கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்! ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன். ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன். வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன். நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன். நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.

சங்கீத புத்தகம் 119:1-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்