நீதிமொழிகள் 19
19
1ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.
2சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
3ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.
4ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.
5இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.
6ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
7ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.
8ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.
9பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.
10ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.
11ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.
12ஒரு ராஜா கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.
13ஒரு முட்டாள் குமாரன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.
14ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.
15ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.
16ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.
17ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.
18உன் குமாரனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.
19ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும், மீண்டும் செய்வான்.
20அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.
21ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.
22ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.
23கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
24சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக்கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம்பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.
25சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும்.
26ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான்.
27போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.
28சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.
29மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
நீதிமொழிகள் 19: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International