மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:12-26

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:12-26 TAERV

அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார். ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர். மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார். இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர். இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார். பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:12-26