மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:1-26

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:1-26 TAERV

புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர். இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள். சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர். இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார். பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார். ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர். மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார். இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர். இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார். பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.