லூக்கா எழுதிய சுவிசேஷம் 15:25-32

லூக்கா எழுதிய சுவிசேஷம் 15:25-32 TAERV

“மூத்த குமாரன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான். “மூத்த குமாரன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். குமாரன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. ஆனால் உங்கள் இன்னொரு குமாரன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான். “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.