யோவான் எழுதிய சுவிசேஷம் 15:1-17

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:1-17 TAERV

“நானே உண்மையான திராட்சைச் செடி, எனது பிதாவே தோட்டக்காரர். அவர், கனிகொடுக்காத எனது கிளைகள் எவையோ அவற்றை வெட்டிப் போடுகிறார். கனிகொடுக்கிற கிளைகளை மேலும் கனி கொடுக்கும்படி அவர் சுத்தம் பண்ணுகிறார். நான் உங்களுக்குச் செய்த உபதேசங்களால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள். நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும். “நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இல்லாத எவனும் செடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கிளைபோல் ஆகிவிடுகிறான். அது காய்ந்துபோகும். மக்கள் அவற்றைப் பொறுக்கி நெருப்பிலே போட்டு எரித்துவிடுகிறார்கள். என்னில் நிரந்தரமாக இருங்கள், என் உபதேசங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் விரும்புகிற எவற்றையும் என்னிடம் கேட்கலாம். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் அதிகக் கனிகளைத் தந்து, நீங்களே என் சீஷர்கள் என்பதைக் காட்ட வேண்டும். இது என் பிதாவுக்கும் மகிமையைக் கொண்டுவரும். “பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைத்தான் நான் உங்களுக்குக் கட்டளை இடுகிறேன்: நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்பு வேறு எதுவுமில்லை. நான் சொன்னபடி செய்தால் நீங்களும் எனது சிறந்த நண்பர்களாவீர்கள். இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்.

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:1-17 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்