எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 52

52
எருசலேமின் வீழ்ச்சி
1சிதேக்கியா யூதாவின் ராஜாவாகியபோது அவனது வயது 21. சிதேக்கியா எருசலேமை பதினோரு ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள். அவள் எரேமியாவின் குமாரத்தி. அவனது குடும்பம் லீப்னா ஊரிலிருந்து வந்தது. 2சிதேக்கியா பொல்லாப்புகளை யோயாக்கீம் போலச் செய்தான். சிதேக்கியா பொல்லாப்புகளைச் செய்வதை கர்த்தர் விரும்பவில்லை. 3எருசலேமுக்கும் யூதாவுக்கும் பயங்கரமானவை நேர்ந்தது. ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கோபமாக இருந்தார். இறுதியாக, கர்த்தர் அவரது பார்வையிலிருந்து எருசலேம் மற்றும் யூதா ஜனங்களைத் தூர எறிந்தார்.
சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு எதிராகத் திரும்பினான். 4எனவே, சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகப் படையெடுத்தான். நேபுகாத்நேச்சாரோடு அவனது முழுப்படையும் இருந்தது. பாபிலோனின் படையானது எருசலேமிற்கு வெளியே முகாமிட்டது. நகரச் சுவரைச் சுற்றிலும் அவர்கள் மதிற்சுவர்களைக் கட்டினார்கள். எனவே அவர்களால் சுவரைத் தாண்ட முடிந்தது. 5எருசலேம் நகரமானது பாபிலோன் படையால் சிதேக்கியாவின் பதினோராவது ஆட்சியாண்டுவரை முற்றுகையிடப்பட்டது. 6அந்த ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் நகரில் பசியானது மிக அதிகமாக இருந்தது. நகர ஜனங்கள் உண்பதற்கு உணவு எதுவும் மீதியில்லை. 7அந்த நாளில் பாபிலோனின் படை எருசலேமிற்குள் நுழைந்தது. எருசலேமிலுள்ள வீரர்கள் வெளியே ஓடினார்கள். அவர்கள் இரவில் நகரைவிட்டு ஓடினார்கள். இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள வாசல் வழியாக அவர்கள் போனார்கள். அந்த வாசல் ராஜாவின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. பாபிலோனின் படை நகரை முற்றுகையிட்டிருந்தபோதிலும் எருசலேம் வீரர்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வனாந்தரத்தின் வழியாக ஓடிப்போனார்கள்.
8ஆனால் பாபிலோனியப்படை ராஜா சிதேக்கியாவைத் துரத்தியது. எரிகோ சமவெளியில் அவர்கள் அவனைப் பிடித்தனர். அவனோடு வந்த வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 9பாபிலோன் படை ராஜா சிதேக்கியாவைக் கைப்பற்றினர். அவர்கள் அவனை ரிப்லா நகரத்திற்குக் கொண்டுபோயினர். ரிப்லா, ஆமாத் நாட்டில் இருக்கிறது. ரிப்லாவில் பாபிலோன் ராஜா சிதேக்கியா பற்றிய தீர்ப்பை அறிவித்தான். 10ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் குமாரர்களை பாபிலோன் ராஜா கொன்றான். தன் குமாரர்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் ராஜா யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான். 11பிறகு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கினான். அவன் அவனுக்கு வெண்கல சங்கிலிகளைப் போட்டான். பிறகு அவன் பாபிலோனுக்கு சிதேக்கியாவைக் கொண்டுப் போனான். பாபிலோனில் அவன் சிறையில் சிதேக்கியாவை அடைத்தான். சிதேக்கியா மரித்துப் போகும்வரை சிறையிலேயே இருந்தான்.
12நேபுசராதான், பாபிலோன் ராஜாவின் சிறப்பு காவல் படையின் தளபதி. அவன் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தின் 10வது நாளில் இது நடந்தது. பாபிலோனில் நேபுசராதான் ஒரு முக்கியமான தலைவன். 13நேபுசராதான் கர்த்தருடைய ஆலயத்தை எரித்தான். அவன் எருசலேமில் ராஜாவின் அரண்மனையையும் இன்னும் பல வீடுகளையும் எரித்தான். எருசலேமில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடத்தையும் எரித்தான். 14பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது. 15நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான். 16ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
17பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள். 18பாபிலோனியப்படை ஆலயத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கொண்டுப்போனது. செப்புச் சட்டிகள், சாம்பல் எடுக்கும் கரண்டிகள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகள், 19ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான். 20இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான். 21ஒவ்வொரு வெண்கலத் தூணும் 31 அடி உயரமுடையது. ஒவ்வொரு தூணும் 21 அடி சுற்றளவு உள்ளது. ஒவ்வொரு தூணும் உள்ளே வெற்றிடம் கொண்டது. ஒவ்வொரு தூணிண் சுவரும் 3 அங்குலம் உடையது. 22முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து. 23மொத்தம் 96 மாதுளம்பழங்கள் தூணின் பக்கங்களில் தொங்கின. ஆக மொத்தம் 100 மாதுளம்பழங்கள் வலைப் பின்னலில் தூண்களைச் சுற்றி இருந்தன.
24ராஜாவின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 25ராஜாவின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் ராஜாவின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான். 26-27நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் ராஜாவிடம் கொண்டு வந்தான். பாபிலோன் ராஜா ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், ராஜா அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான்.
எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர். 28நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது:
நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
29நேபுகாத்நேச்சாரின் 18வது ஆட்சியாண்டில் 832 ஜனங்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
30நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான்.
நேபுசராதான் ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.
யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான்
31யோயாக்கீன் யூதாவின் ராஜா. இவன் பாபிலோனில் 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். பாபிலோனின் ராஜாவாகிய ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமாயிருந்தான். அவ்வாண்டில் யோயாக்கீனை சிறையைவிட்டு விடுவித்தான். இதே ஆண்டில்தான் ஏவில்மெரொதாக் பாபிலோனின் ராஜா ஆனான். ஏவில்மெரொதாக் 12வது மாதத்தின் 25ஆம் நாளன்று யோயாக்கீனை சிறையிலிருந்து விடுவித்தான். 32ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமான வழியில் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற ராஜாக்களுக்குரியதைவிட கௌரவமான இடத்தைக் கொடுத்தான். 33எனவே யோயாக்கீன் தனது சிறை உடையை நீக்கினான். மீதியுள்ள வாழ்நாளில், ராஜாவின் மேசையில் ஒழுங்காகச் சாப்பிட்டான். 34ஒவ்வொரு நாளும் பாபிலோன் ராஜா யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 52: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்