எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 36

36
எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்
1கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் ராஜாவாக யோசியாவின் குமாரன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: 2“எரேமியா, ஒரு புத்தச்சுருளை எடு. நான் உன்னிடம் சொன்ன அனைத்து செய்திகளையும் அதில் எழுது. நான் உன்னிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா மற்றும் அனைத்து தேசங்களைப்பற்றிக் கூறியிருக்கிறேன். யோசியா ராஜாவாக இருந்த காலம் முதல் இன்றுவரை நான் உனக்குச் சொன்ன அனைத்தையும் எழுது. 3நான் அவர்களுக்காக செய்ய திட்டமிட்டுக்கொண்டிருப்பதை ஒரு வேளை யூதா ஜனங்கள் கேட்கலாம். அப்போது ஒவ்வொருவனும் தன்னுடைய தீயச் செயல்களை நிறுத்திவிடலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், நான் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களை மன்னிப்பேன்.”
4எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் குமாரன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச்சுருளில் அச்செய்திகளை எழுதினான். 5பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை. 6எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச்சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச்சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி. 7ஒரு வேளை அந்த ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு உதவ வேண்டுமென கேட்பார்கள். ஒரு வேளை ஒவ்வொருவனும் தன்னுடைய தீய செயல் செய்வதை நிறுத்திவிடலாம். கர்த்தர் அந்த ஜனங்களுடன் கோபமுள்ளவராக இருக்கிறார்” என்பதை அறிவித்திருக்கிறார். 8எனவே, நேரியாவின் குமாரனான பாருக் தீர்க்கதரிசியான எரேமியா சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான். பாருக், கர்த்தருடைய செய்தி எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளை உரக்க வாசித்தான். அவன் அதனை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான்.
9யோயாக்கீம் ராஜாவாகிய ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் ஒரு உபவாசம் அறிவிக்கப்பட்டது. எருசலேம் நகரத்தில் வாழ்கின்ற அனைத்து ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்னால் உபவாசம் இருக்கவேண்டும். 10அப்போது, எரேமியாவின் வார்த்தைகள் உள்ள புத்தகச்சுருளைப் பாருக் வாசித்தான். அவன் புத்தகச்சுருளை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களின் முன்பும் பாருக் புத்தகச்சுருளை வாசித்தான். பாருக், புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கும்போது மேற்பிரகாரத்திலுள்ள கெமரியாவின் அறையில் இருந்தான். அந்த அறை ஆலயத்தின் புதிய வாசல் நுழைவில் இருந்தது. கெமரியா சாப்பானின் குமாரன். கெமரியா ஆலயத்தில் எழுத்தாளனாக இருந்தான்.
11மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச்சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் குமாரன். கெமரியா, சாப்பானின் குமாரன். 12மிகாயா புத்தகச்சுருளிலுள்ள செய்திகளை கேட்டதும் ராஜாவின் அரண்மனையில் உள்ள செயலாளனின் அறைக்குச் சென்றான். ராஜாவின் அரண்மனையில் எல்லா அரச அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரிகளின் பெயர்களாவன: செயலாளனாகிய எலிசாமா, செமாயாவின் குமாரனாகிய தெலாயா, அக்போரின் குமாரனான எல்நாத்தான், சாப்பானின் குமாரனான கெமரியா, அனனியாவின் குமாரனான சிதேக்கியா, மற்றும் பல பிரபுக்களும் அங்கே இருந்தனர். 13மிகாயா, பாருக் புத்தகச்சுருளில் வாசித்து கேட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் சொன்னான்.
14பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் குமாரன். நெத்தானியா செலேமியாவின் குமாரன். செலேமியா கூஷியின் குமாரன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான்.
நேரியாவின் குமாரனான பாருக் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.
15பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச்சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச்சுருளை வாசித்தான்.
16அந்த அரச அதிகாரிகள் புத்தகச்சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச்சுருளில் உள்ள செய்திகளை ராஜா யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர். 17பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.
18பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச்சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.
19பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.
20பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச்சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் ராஜாவாகிய யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச்சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
21எனவே, ராஜா யோயாக்கீம் யெகுதியை அனுப்பி புத்தகச்சுருளை வரவழைத்தான். யெகுதி எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலிருந்து புத்தகச்சுருளைக் கொண்டுவந்தான். பிறகு யெகுதி ராஜாவிடம் புத்தகச்சுருளை வாசித்தான். ராஜாவைச்சுற்றி அனைத்து அதிகாரிகளும் நின்றனர். 22இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, ராஜா யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். ராஜாவுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது. 23யெகுதி புத்தகச்சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் ராஜாவாகிய யோயாக்கீம் புத்தகச்சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச்சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று. 24ராஜா யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.
25எல்நாத்தன், தெலாயா மற்றும் கெமரியா ராஜா யோயாக்கீமிடம் புத்தகச்சுருளை எரிக்க வேண்டாம் என்று சொல்ல முயன்றனர். ஆனால் ராஜா அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. 26யோயாக்கீம் ராஜா சிலரிடம் எழுத்தாளனான பாருக்கையும் தீர்க்கதரிசி எரேமியாவையும் கைது செய்யும்படிக் கட்டளையிட்டான். அவர்கள், ராஜாவின் குமாரன் யெரமெயேல், அஸ்ரியேலின் குமாரன் செராயா, அப்தெயேலின் குமாரனான செலேமியாவும் ஆவார்கள். ஆனால் அவர்களால் பாருக்கையும் எரேமியாவையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், கர்த்தர் அவர்களை மறைத்துவிட்டார்.
27கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் ராஜா யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்:
28“எரேமியா, இன்னொரு புத்தகச்சுருளை எடு. முதல் புத்தகச்சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் ராஜா யோயாக்கீமால் எரிக்கப்பட்டது. 29எரேமியா, யூதா ராஜா யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், கர்த்தர் சொல்கிறது இதுதான்: ‘யோயாக்கீம், அப்புத்தகச்சுருளை எரித்தாய். நீ, “பாபிலோன் ராஜா உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் ராஜா இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?” என்று சொன்னாய். 30எனவே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் ராஜாவுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும். 31கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’”
32பிறகு எரேமியா இன்னொரு புத்தகச்சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் குமாரனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச்சுருளில் எழுதினான். அதில் ராஜா யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச்சுருளில் சேர்க்கப்பட்டன.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 36: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்