எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 31:27-34

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 31:27-34 TAERV

“நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும் மிருகங்களும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன். கடந்த காலத்தில், நான் இஸ்ரவேலையும் யூதாவையும் கண்காணித்தேன். ஆனால், நான் அவர்களை வெளியே பிடுங்கிப்போடும் காலத்துக்காகவும் பார்த்திருந்தேன். நான் அவர்களைக் கிழித்துப்போட்டேன். நான் அவர்களை அழித்தேன். நான் அவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது நான் அவர்களைக் கட்டவும் பலமாகச் செய்யவும் கவனிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் என்றைக்கும் இந்த பழமொழியைச் சொல்லமாட்டார்கள்: “‘பெற்றோர்கள் புளித்த திராட்சைகளைத் தின்றனர். ஆனால் பிள்ளைகள் புளிப்புச் சுவையைப் பெற்றனர்.’ இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான். புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.” கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”