எரேமியா 31:27-34

எரேமியா 31:27-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார். “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்நாட்களில் மக்கள், “ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.” யெகோவா அறிவிக்கிறதாவது, “இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது. அது அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை. ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும், அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன். அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன், அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள். இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான். ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”

எரேமியா 31:27-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களையும், யூதா மக்களையும், மனிதவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன். அப்பொழுது நான் பிடுங்கவும், இடிக்கவும், நிர்மூலமாக்கவும், அழிக்கவும், தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி எச்சரிக்கையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும், நாட்டவும் அவர்கள்பேரில் எச்சரிக்கையாயிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். பிதாக்கள் திராட்சைக்காய்களைச் சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசியது என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்களை சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன். நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார். அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

எரேமியா 31:27-34 பரிசுத்த பைபிள் (TAERV)

“நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும் மிருகங்களும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன். கடந்த காலத்தில், நான் இஸ்ரவேலையும் யூதாவையும் கண்காணித்தேன். ஆனால், நான் அவர்களை வெளியே பிடுங்கிப்போடும் காலத்துக்காகவும் பார்த்திருந்தேன். நான் அவர்களைக் கிழித்துப்போட்டேன். நான் அவர்களை அழித்தேன். நான் அவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது நான் அவர்களைக் கட்டவும் பலமாகச் செய்யவும் கவனிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் என்றைக்கும் இந்த பழமொழியைச் சொல்லமாட்டார்கள்: “‘பெற்றோர்கள் புளித்த திராட்சைகளைத் தின்றனர். ஆனால் பிள்ளைகள் புளிப்புச் சுவையைப் பெற்றனர்.’ இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான். புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.” கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”

எரேமியா 31:27-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன். அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.