ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 66
66
அனைத்து தேசங்களையும் தேவன் நியாயம் தீர்ப்பார்
1கர்த்தர் சொல்கிறது இதுதான், “வானங்கள் என்னுடைய சிங்காசனம்.
பூமி எனது பாதப்படி.
எனவே, எனக்கு ஒரு ஆலயம் கட்ட முடியுமென்று நீ நினைக்கிறாயா? முடியாது. உன்னால் முடியாது!
நான் ஓய்வெடுக்கும் இடத்தை உன்னால் கொடுக்கமுடியுமா? உன்னால் முடியாது!
2நானே எனக்கு இவற்றையெல்லாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் இங்கே உள்ளன.
ஏனென்றால், நான் இவற்றைப் படைத்தேன்.”
கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார்.
“எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும்.
ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன்.
எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன்.
எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
3சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள்.
ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள்.
அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள்.
அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள்.
ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எனது வழியை அல்ல.
தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள்.
அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
4எனவே, நான் அவர்களது தந்திரங்களையே பயன்படுத்த முடிவு செய்தேன்.
அதாவது அவர்கள் எதைக்கண்டு அதிகமாகப் பயப்படுகிறார்களோ, அதனாலேயே அவர்களைத் தண்டிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழைத்தேன்.
ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை.
நான் அவர்களோடு பேசினேன்.
ஆனால், அவர்கள் என்னைக் கேட்கவில்லை.
எனவே, நான் அதனையே அவர்களுக்குச் செய்வேன்.
நான் விரும்பாதவற்றையே அவர்கள் செய்யத் தேர்ந்தெடுத்தனர்.”
5கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிகிற ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்கிறவற்றையும் கேட்கவேண்டும்.
“உங்களை உங்கள் சகோதரர் வெறுத்தார்கள்.
அவர்கள் உங்களுக்கு எதிராக மாறினார்கள்.
ஏனென்றால், என்னை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
உங்கள் சகோதரர்கள் கூறினார்கள், ‘கர்த்தர் மகிமைப்படுத்தப்படும்போது, நாங்கள் உம்மிடம் திரும்பிவருவோம்.
பிறகு, நாங்கள் உங்களோடு மகிழ்ச்சியாக இருப்போம்’ அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.”
தண்டனையும் புதிய நாடும்
6கவனியுங்கள்! நகரத்திலிருந்தும், ஆலயத்திலிருந்தும் பேரோசை வந்துகொண்டிருக்கிறது. அது கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கும் ஓசை. அவர்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
7-8“ஒரு பெண் பிரசவ வலியை உணர்வதற்கு முன்பு ஒரு குழந்தையைப் பெறமுடியாது. ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் குழந்தையைப் பார்க்கும்முன் அதற்குரிய வலியை உணரவேண்டும். அதைப்போலவே, எவரும் ஒரு புதிய நாடு ஒரே நாளில் பிறப்பதைக் காணமுடியாது. எவரும் ஒரு நாடு ஒரே நாளில் தோன்றியதைக் கேள்விப்பட்டிருக்க முடியாது. அந்த நாடு பிரசவ வலிபோன்று முதிலில் வலியை அறியவேண்டும். பிரசவ வலிக்குப் பிறகே, நாடு தன் பிள்ளையாகிய புதிய நாட்டைப் பெற்றெடுக்கும். 9இதைப்போலவே நான் புதிய ஒன்று பிறக்க இடமில்லாமல் வலிக்குக் காரணமாக இருக்கமாட்டேன்.”
கர்த்தர் இதனைச் சொல்கிறார், “நான் வாக்குறுதிச் செய்கிறேன். நான் உங்களது பிரசவ வலிக்குக் காரணமாக இருந்தால், புதிய நாட்டை உங்களுக்குத் தராமல் நிறுத்தமாட்டேன்.” உங்கள் தேவன் இதைச் சொன்னார்.
10எருசலேமே மகிழ்ச்சிகொள்!
எருசலேமை நேசிக்கிற ஜனங்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்!
எருசலேமிற்கு துன்பங்கள் ஏற்பட்டன.
எனவே, ஜனங்களில் சிலர் வருத்தமாய் இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்!
11ஏனென்றால், மார்பிலிருந்து பால் வருவது போன்று நீங்கள் இரக்கத்தைப் பெறுவீர்கள்.
அந்தப் பால் உண்மையில் உங்களைத் திருப்திப்படுத்தும்.
நீங்கள் அந்தப் பாலைக் குடிப்பீர்கள்.
நீங்கள் உண்மையில் எருசலேமின் மகிமையை அனுபவிப்பீர்கள்.
12கர்த்தர் கூறுகிறார், “பார், நான் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பேன்.
இந்தச் சமாதானம் உங்களுக்குப் பெருக்கெடுத்து வரும் ஆற்றினைப்போல் பாயும்.
அனைத்து நாடுகளில் உள்ள செல்வங்களும் உன்னிடம் பாய்ந்து வரும்.
அந்தச் செல்வம் வெள்ளம்போல் வரும்.
நீங்கள் சிறு குழந்தைகளைப்போன்று இருப்பீர்கள். நீங்கள் பாலைக் (செல்வம்) குடிப்பீர்கள்!
நான் உங்களைத் தூக்கி எனது கைகளில் வைத்துக்கொள்வேன்.
நான் உங்களை எனது முழங்காலில் வைத்து தாலாட்டுவேன்.
13ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்!
நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள்.”
14நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியடைகிறவற்றைப் பார்ப்பீர்கள்.
நீங்கள் விடுதலை பெற்று புல்லைப்போல வளருவீர்கள்.
கர்த்தருடைய ஊழியர்கள் அவருடைய வல்லமையைக் காண்பார்கள்.
ஆனால், கர்த்தருடைய பகைவர்கள் அவரது கோபத்தைப் பார்ப்பார்கள்.
15பாருங்கள், கர்த்தர் நெருப்போடு வந்துகொண்டிருக்கிறார்.
கர்த்தருடைய படைகள் புழுதி மேகங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களைத் தனது கோபத்தால் தண்டிப்பார்.
கர்த்தர் நெருப்பின் ஜீவாலையைப் பயன்படுத்தி, அவர் கோபமாக இருக்கையில் அந்த ஜனங்களைத் தண்டிப்பார்.
16கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
பிறகு கர்த்தர் ஜனங்களை வாளாலும் நெருப்பாலும் அழிப்பார்.
கர்த்தர் அதிகமான ஜனங்களை அழிப்பார்.
17“அந்த ஜனங்கள் அவர்களின் சிறப்பான தோட்டத்தில், தொழுதுகொள்வதற்காகத் தம்மைத் தாமே கழுவி சுத்தப்படுத்திக்கொள்வார்கள். அவர்களின் சிறப்பான தோட்டத்திற்கு அந்த ஜனங்கள் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து செல்வார்கள். பிறகு அவர்கள் தம் விக்கிரகங்களைத் தொழுதுகொள்வார்கள். ஆனால் அனைத்து ஜனங்களையும் கர்த்தர் அழிப்பார். அந்த ஜனங்கள் பன்றிகள், எலிகள் மற்றும் மற்ற அழுக்கானவற்றின் இறைச்சியைத் உண்கிறார்கள். ஆனால் அந்த அனைத்து ஜனங்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள். (கர்த்தர் இவற்றை அவராகவே சொன்னார்).
18“அந்த ஜனங்கள் தீய நினைவுகளைக் கொண்டு தீயவற்றைச் செய்தனர். எனவே, நான் அவர்களைத் தண்டிக்க வந்துகொண்டிருக்கிறேன். நான் அனைத்து நாடுகளையும் அனைத்து ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். அனைத்து ஜனங்களும் சேர்ந்து வந்து எனது வல்லமையைப் பார்ப்பார்கள். 19நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள். 20அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள். 21நானும் இந்த ஜனங்களில் சிலரை ஆசாரியர்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார்.
புதிய வானங்களும் புதிய பூமியும்
22“நான் ஒரு புதிய உலகத்தைப் படைப்பேன். புதிய வானங்களும் புதிய பூமியும் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவ்வாறே உங்கள் பெயர்களும், உங்கள் பிள்ளைகளும் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். 23ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
24“இந்த ஜனங்கள் எனது பரிசுத்தமான நகரத்தில் இருப்பார்கள். அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியே போனால் எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அந்த உடல்களில் புழுக்கள் இருக்கும். அப்புழுக்கள் என்றும் சாகாது. நெருப்பு அந்த உடல்களை எரித்துப்போடும். அந்நெருப்பு அணையாமல் இருக்கும்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 66: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International