ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 31
31
தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்
1எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.
2ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார்.
3எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.
4கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார்.
அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். 5சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.
6இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். 7பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.
8அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். 9அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள்.
கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 31: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International