எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:18-29

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:18-29 TAERV

நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. “நான் பயத்தால் நடுங்குகிறேன்” என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும். அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.