ஆகாய் 1
1
ஆலயம் கட்டும் நேரம் இது
1ராஜாவாகிய தரியு ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டு, ஆறாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய செய்தி ஆகாய்க்கு வந்தது. இச்செய்தி செருபாபேலுக்கு உரியது. இவன் செயல்த்தியேலின் குமாரன். யோத்சதாக்கின் குமாரன் யோசுவா. செருபாபேல் யூதாவின் ஆளுநர், யோசுவா தலைமை ஆசாரியன். இதுதான் செய்தி: 2சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதற்கான சரியான நேரம் இது அல்ல என்று ஜனங்கள் சொல்கிறார்கள்.”
3மீண்டும் ஆகாய் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். ஆகாய், 4“நல்ல வீடுகளில் வாழும் சரியான நேரம் இது என்று ஜனங்களாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். நீங்கள் சுவரில் மரப்பலகைகள் பொருத்தப்பட்ட வீடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கர்த்தருடைய வீடு இன்னும் அழிவிலிருக்கிறது. 5இப்பொழுது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: என்ன நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்! 6நீ ஏராளமான விதைகளை விதைத்தாய். ஆனால், நீ குறைந்த அளவு அறுவடையையே பெற்றாய். உன்னிடம் உண்ண உணவு இருக்கும். ஆனால் அதனால் வயிறு நிறையாது. உனக்குக் குடிக்கக் ஏதாவது இருக்கும். ஆனால் முழுமையாகக் குடிக்கப் போதாது. உன்னிடம் குறைந்த அளவு ஆடை அணிய இருக்கும், ஆனால் அவை குளிர்தாங்க உதவாது. நீ குறைந்த பணத்தைச் சம்பாதிப்பாய். ஆனால் உன் பணம் எங்கே போகிறது என்று உனக்குத் தெரியாது. உனது பையில் ஓட்டை விழுந்தது போல் இருக்கும்” என்றார்.
7சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப்பற்றி சிந்தியுங்கள். 8மரங்களைக் கொண்டு வருவதற்கு குன்றுகளின் மேல் ஏறுங்கள். ஆலயத்தைக் கட்டுங்கள். பிறகு நான் ஆலயத்தின்மேல் திருப்தி அடைவேன். நான் கனத்தை பெறுவேன்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது. 10அதனால்தான் வானம் பனியை வரப்பண்ணாமல் இருக்கிறது. அதனால்தான் பூமி விளைச்சலைத் தராமல் உள்ளது.”
11கர்த்தர் கூறுகிறார்: “நான் நிலங்களும் குன்றுகளும் வறண்டுபோகும்படிக் கட்டளை கொடுத்தேன். தானியம், புதிய திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், பூமி உற்பத்தி செய்கிற அனைத்தும் அழிக்கப்பட்டன. அனைத்து ஜனங்களும், அனைத்து விலங்குகளும் பலவீனமாவார்கள். மனிதரின் அனைத்து உழைப்பும் பயனற்றுப்போகும்.”
புதிய ஆலயத்தில் வேலைகள் தொடங்குகின்றன
12தேவனாகிய கர்த்தர் செயல்த்தியேலின் குமாரானாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் கேட்க, பேசிட ஆகாயை அனுப்பினார். எனவே இம்மதனிதர்களும், அனைத்து ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய குரலுக்கும், அவர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவி கொடுத்தார்கள். ஜனங்கள் கர்த்தருக்கு முன்னால் பயந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
13இச்செய்தியை ஜனங்களுக்குச் சொல்ல தேவனாகிய கர்த்தர் அனுப்பிய தூதுவன்தான் ஆகாய். கர்த்தர், “நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார்.
14பிறகு தேவனாகிய கர்த்தர் ஜனங்கள் ஆலயம் கட்டுவதைக் குறித்து உற்சாகப்படும்படிச் செய்தார். செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் யூதாவின் ஆளுநராக இருந்தான். கர்த்தர் அவனையும் பரவசப்படும்படிச் செய்தார். யோத்சதாக்கின் குமாரனான யோசுவா தலைமை ஆசாரியனாக இருந்தான். கர்த்தர் அவனையும் பரவசப்படும்படிச் செய்தார். கர்த்தர் அனைத்து ஜனங்களையும் ஆலயம் கட்டு வதுபற்றி பரவசப்படும்படிச் செய்தார். எனவே அவர்களின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டத்தொடங்கினார்கள். 15அவர்கள் தரியு ராஜாவின் இரண்டாம் ஆண்டு ஆறாம் மாதம் இருபத்தி நான்காம் நாள் வேலைச் செய்யத் தொடங்கினார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஆகாய் 1: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International