எஸ்றாவின் புத்தகம் 8

8
எஸ்றாவோடு திரும்பிய தலைவர்கள்
1பாபிலோனில் இருந்து எருசலேமிற்கு என்னோடு வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் மற்ற ஜனங்களின் பெயர்கள்: அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது நாங்கள் எருசலேமிற்கு வந்தோம். அப்போது வந்தவர்களின் பெயர்ப்பட்டியல்:
2பினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்;
3செக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்;
4பாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்;
5செக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் குமாரனும் அவனோடு 300 ஆண்களும்;
6ஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்;
7ஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்;
8செப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்;
9யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;
10பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் குமாரனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;
11பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது குமாரனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;
12அஸ்காதின் சந்ததியில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;
13அதோனிகாம் என்பவனின் கடைசி சந்ததியில் எலிபேலேத், ஏயேல், செமாயா என்னும் பெயர்கள் உள்ளவர்களும், அவர்களோடு 60 ஆண்களும்;
14பிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள்.
எருசலேமிற்குத் திரும்பியது
15நான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை. 16எனவே நான் கீழ்க்கண்ட தலைவர்களை அழைத்தேன்: எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம். அதோடு யோயாரிப், எல்நாத்தான் என்னும் போதகர்களையும் அழைத்தேன். 17நான் அவர்களை இத்தோவுக்கு அனுப்பினேன். கஸ்பியா எனும் நகரத்துக்கு இத்தோ தலைவனாக இருந்தான். நான் அவர்களிடம், இத்தோ மற்றும் அவனது உறவினர்களிடம் பேச வேண்டியதைப்பற்றிக் கூறினேன். அவனது உறவினர்கள் ஆலயக் கட்டிட வேலைகளைச் செய்பவர்கள். நான் அவர்களை இத்தோவிடம் அனுப்பியதால் அவன் தேவாலயக் கட்டிடக்காரர்களை அனுப்பி வைப்பான். 18ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்ததால், இத்தோவின் உறவினர்கள் கீழக்கண்டவர்களை அனுப்பி வைத்தனர்: மகேலி என்பவனின் சந்ததியில் ஒருவனும், அறிவாளியுமான செரெபியா: மகேலி லேவியின் குமாரர்களில் ஒருவன். லேவி இஸ்ரவேலின் குமாரர்களில் ஒருவன். அவர்கள் செரெபியாவின் குமாரர்களையும், சகோதரர்களையும் அனுப்பினார்கள். அக்குடும்பத்தில் மொத்தம் 18 பேர் வந்தனர். 19அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள், அதனோடு அவர்களின் குமாரர்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர். 20அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன.
21அகாவா ஆற்றின் அருகில் நான், (எஸ்றா) நாம் அனைவரும் உபவாசம் இருக்கவேண்டும். தேவனுக்கு முன்னால் நம்மைப் பணிவாக்கிக்கொள்ள நாம் உபவாசம் இருக்க வேண்டும். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், நமக்கு உடமையுமான எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ள விரும்பினோம். 22நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் ராஜாவிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம். 23அதனால் நாங்கள் உபவாசம் இருந்து எங்கள் பயணத்துக்கு உதவும்படி எங்கள் தேவனிடம் ஜெபித்தோம். எங்கள் ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார்.
24பிறகு நான் 12 ஆசாரியர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நான் செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களது சகோதரர்களில் 10 பேரையும் தேர்ந்தெடுத்தேன். 25நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா ராஜாவும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள். 26நான் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்த்தேன். அவற்றில் 25 டன்கள் எடையுள்ள வெள்ளியும், 3 3/4 டன் எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களும், 3 3/4 டன் எடையுள்ள தங்கமும் இருந்தன. 27நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன். 28பிறகு நான் அந்த 12 ஆசாரியர்களிடமும், “நீங்களும் இந்தப் பொருட்களும் கர்த்தருக்கு பரிசுத்தமானவை. உங்கள் முற்பிதாக்களின் தேவனான கர்த்தருக்கு, ஜனங்கள் இப்பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தனர். 29எனவே இவற்றை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களே இதற்கு, இவற்றை எருசலேமில் உள்ள ஆலயத் தலைவர்களுக்குக் கொடுக்கும்வரை பொறுப்பானவர்கள். நீங்கள் இவற்றை லேவியர்களின் தலைவர்களுக்கும், இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் அவற்றை எடைபோட்டு அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலய அறைகளில் பத்திரமாக வைக்கவேண்டும்” என்றேன்.
30எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.
31முதல் மாதத்தில் 12வது நாள் நாங்கள் அகாவா ஆற்றைவிட்டு எருசலேமை நோக்கிப் புறப்பட்டோம். தேவன் எங்களோடு இருந்தார். வழியில் பகைவர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினார். 32பிறகு நாங்கள் எருசலேம் வந்து சேர்ந்தோம். அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்தோம். 33நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் குமாரனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் குமாரனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் குமாரனான யோசபாத்தும், பின்னுயின் குமாரனான நொவதியாவும் இருந்தார்கள். 34எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.
35பிறகு சிறையிலிருந்து மீண்ட யூத ஜனங்கள் வந்து இஸ்ரவேலின் தேவனுக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் சேர்த்து 12 காளைகள், 96 செம்மறி ஆட்டுக்கடாக்கள், 77 ஆட்டுக்குட்டிகள், 12 ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றைப் பாவப் பரிகாரப் பலியாகச் செலுத்தினர். இவை அனைத்தும் கர்த்தருக்கானத் தகனபலியாகும்.
36பிறகு அவர்கள் அர்தசஷ்டாவின் கடிதத்தை ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிகளுக்குரிய ஆளுநரிடமும், தலைவர்களிடமும் கொடுத்தனர். பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆலயத்திற்கும் கொடுத்தனர்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்றாவின் புத்தகம் 8: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்