எஸ்றாவின் புத்தகம் 4

4
மீண்டும் ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராக வந்த விரோதிகள்
1-2அப்பகுதியில் வாழ்ந்த பலரும், யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களுக்கு எதிராக இருந்தனர். அந்த விரோதிகள் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வந்தவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் செருபாபேலிடமும், குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்கள் உங்களுக்கு ஆலயம் கட்ட உதவட்டுமா? நாங்களும் உங்களைப் போன்றவர்களே, உங்கள் தேவனிடம் உதவி வேண்டுகிறோம். அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் எங்களை இங்கு அழைத்து வந்த நாள் முதலாக நாங்கள் உங்கள் தேவனுக்குப் பலிகொடுத்து வருகிறோம்” என்றனர்.
3ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர்.
4இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர். 5அந்த விரோதிகள் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி யூதர்களுக்கு எதிராக வேலை செய்யவைத்தனர். யூதர்களின் ஆலயம் கட்டும் திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். இது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலம் முழுவதும் தொடர்ந்தது. பெர்சியாவின் ராஜாவாக தரியு ஆகும்வரைக்கும் இது தொடர்ந்து இருந்தது.
6அந்த விரோதிகள் ராஜாவுக்குக் கடிதங்கள் எழுதி யூதர்களைத் தடுக்க முயன்றனர். பெர்சியாவின் ராஜாவாக அகாஸ்வேரு இருந்தபோது எழுதினார்கள்.
எருசலேமை மீண்டும் கட்டுவதை எதிர்த்தவர்கள்
7பிறகு, பெர்சியாவின் புதிய ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு, அந்த எதிரிகள் யூதர்களைக் குறைக்கூறி கடிதம் எழுதினார்கள். பிஸ்லாம், மித்திரேதாத், தாபெயேல், மற்றும் அவர்கள் குழுக்களில் உள்ள மற்ற அனைவரும் சேர்ந்து இக்கடிதத்தை எழுதினார்கள். ராஜா அர்தசஷ்டாவுக்கு எழுதப்பட்ட இக்கடிதம் அரமாய்க் மொழியிலும், அரமாய்க் எழுத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுமிருந்தது. (பாபிலோன் பிரதேசத்தில் ஆட்சி மொழியாக அரமாய்க் இருந்தது).
8பிறகு ஆணை அதிகாரியான ரெகூமும், செயலாளரான சிம்சாவும் எருசலேம் ஜனங்களுக்கு எதிராகக் கடிதம் எழுதினார்கள். ராஜாவாகிய அர்தசஷ்டாவிற்கு அவர்கள் இக்கடிதத்தை எழுதினார்கள். கடிதத்தில் எழுதப்பட்ட விபரம் பின்வருமாறு:
9தலைமை அதிகாரி ரெகூம் மற்றும் செயலாளரான சிம்சாவிடமிருந்தும் தீனாவியர், அபற்சாத்தினர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஆகியோர்களின் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும், சூசாவிலிருந்து வந்த ஏலாமியர்களிடமிருந்தும், 10மகத்தானவனும், வலிமை மிக்கவனுமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து சமாரியா நகருக்கும் ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், நகர்த்தப்பட்ட மற்ற ஜனங்களிடமிருந்தும்,
11அர்தசஷ்டா ராஜாவுக்கு,
ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பக்கம் வாழும் உங்கள் சேவகர்களாகிய ஜனங்கள் எழுதிக்கொள்வது:
12அர்தசஷ்டா ராஜாவே, உங்களால் அனுப்பப்பட்ட யூதர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்ட முயல்கிறார்கள். எருசலேம் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நகரம். இந்நகரிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றார்கள். இப்போது அந்த யூதர்கள் அஸ்திபாரங்களைப் போட்டு சுவர்களைக் கட்டி கொண்டிருக்கிறார்கள்.
13மேலும் ராஜா அர்தசஷ்டாவே, எருசலேமும் அதன் சுவர்களும் எழுப்பப்பட்டால், எருசலேம் ஜனங்கள் வரிக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதை நீர் அறிய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கிற காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கடமை வரிகளையும் கட்டமாட்டார்கள். ராஜா அந்தப் பணம் முழுவதையும் இழந்துவிடுவீர்கள்.
14நாங்கள் ராஜாவுக்குப் பொறுப்பு உள்ளவர்கள். இவ்வாறு நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை ராஜாவுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம்.
15ராஜா அர்தசஷ்டாவே, உங்களுக்கு முன்னால் அரசாண்ட ராஜாக்கள் எழுதி வைத்தவற்றை நீங்கள் தேடி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவற்றில் எருசலேம் எப்பொழுதும் ராஜாக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருப்பதை நீங்கள் காண முடியும். இதனால் பல நாடுகளுக்கும் ராஜாக்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. ஆரம்ப காலம் முதலே பல கலகங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அதனால்தான் எருசலேம் அழிக்கப்பட்டது.
16ராஜா அர்தசஷ்டாவே, இந்த நகரமும் இதன் சுவர்களும் மீண்டும் எழுப்பப்பட்டால், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம், என்று எழுதியிருந்தார்கள்.
17பிறகு ராஜா அர்தசஷ்டா இந்தப் பதிலை எழுதினான்:
தலைமை அதிகாரியான ரெகூமுக்கும், செயலாளரான சிம்சாயிக்கும், சமாரியாவில் வாழ்கின்ற மற்ற ஜனங்களுக்கும் ஐபிராத்து ஆற்றின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஜனங்களுக்கும்,
வாழ்த்துக்கள்.
18நீங்கள் எனக்கு அனுப்பியக் கடிதம் மொழி பெயர்க்கப்பட்டு எனக்கு வாசிக்கப்பட்டது. 19எனக்கு முன்னால் இருந்த ராஜாக்கள் எழுதி வைத்ததை எல்லாம் தேடிட கட்டளையிட்டேன். எழுதப்பட்டவற்றை வாசித்தேன். எருசலேமில் ராஜாக்களுக்கு எதிரான ஒரு நீண்ட கலக வரலாறு இருப்பதை அறிந்தேன். அடிக்கடி அங்கு கலகக்காரர்கள் கலகம் செய்வதற்கான இடமாக உள்ளது. 20ஐபிராத்து ஆற்றுக்கு மேற்கிலுள்ள பகுதி முழுவதையும் ஆட்சி செய்த வலிமைமிக்க ராஜாக்களை எருசலேம் பெற்றிருந்திருக்கிறது. ராஜாக்களைக் கௌரவிக்க வரிகளும், பணமும் செலுத்தப்பட்டன மேலும் அவ்வரசர்களுக்குக் கப்பங்களும் கட்டப்பட்டன.
21இப்போது, நீங்கள் அவர்களின் வேலையை நிறுத்தும்படி கட்டளையிட வேண்டும். நான் மீண்டும் கூறும்வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும். 22இந்த காரியத்தில் அசட்டையாய் இருக்காதீர்கள். எருசலேம் வேலைகள் தொடரக் கூடாது. அது தொடர்ந்தால், நான் எருசலேமில் இருந்து எவ்விதப் பணமும் பெற முடியாது.
23எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.
ஆலயத்தின் வேலை நிறுத்தப்படுகிறது
24எனவே எருசலேமில் தேவனுடைய ஆலய வேலை நிறுத்தப்பட்டது. பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ஆட்சிச் செய்த இரண்டாவது ஆண்டுவரை வேலை தொடரப்படவில்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்றாவின் புத்தகம் 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்