எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 29
29
எகிப்துக்கு விரோதமான செய்தி
1பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2“மனுபுத்திரனே, எகிப்து மன்னனான பார்வோனைப் பார். அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக எனக்காகப் பேசு. 3‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்.
நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு,
“இது என்னுடைய நதி!
நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.
4-5“‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன்.
நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்.
நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து,
வறண்ட நிலத்தில் போடுவேன்.
நீ தரையில் விழுவாய்.
உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள்.
நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன்.
நீ அவற்றின் உணவு ஆவாய்.
6பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும்
நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!
“‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்?
இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
7இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது.
அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள்.
ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”
8எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன்.
நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
9எகிப்து வெறுமையாகி அழியும்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
தேவன் சொன்னார்: “ஏன் நான் இவற்றைச் செய்யப்போகிறேன்? நீ, ‘இது எனது நதி. நான் இந்த நதியை உண்டாக்கினேன்’ என்று கூறினாய். 10எனவே, நான் (தேவன்) உனக்கு விரோதமாக இருக்கிறேன். உன் நைல் நதியின் பல கிளைகளுக்கும் நான் விரோதமானவன். நான் எகிப்தை முழுமையாக அழிப்பேன். நகரங்கள் மிக்தோலிலிருந்து செவெனேவரை, எத்தியோப்பியா எல்லைவரை வெறுமையாகும். 11எந்த மனிதரும் மிருகமும் எகிப்து வழியாகப் போகமுடியாது. எதுவும் 40 ஆண்டுகளுக்கு எகிப்தில் வாழ முடியாது. 12நான் எகிப்தை அழிப்பேன். நகரங்கள் 40 ஆண்டுகளுக்கு அழிந்த நிலையிலேயே இருக்கும். நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். நான் அவர்களை அயல்நாடுகளில் அந்நியர்களாக்குவேன்.”
13எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். ஆனால் 40 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை மீண்டும் கூட்டுவேன். 14நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும், 15இது மிக அற்பமான அரசாக இருக்கும். இது மற்ற நாடுகளைவிட மேலாக என்றும் உயராது. நான் அதனை வேறு நாடுகளை ஆளமுடியாதபடி மிகச் சிறிதாக்குவேன். 16இஸ்ரவேல் வம்சத்தார் மீண்டும் எகிப்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். இஸ்ரவேலர்கள் தம் பாவத்தை நினைப்பார்கள். அவர்கள் தேவனை நோக்கித் திரும்பாமல், உதவிக்காக எகிப்திடம் திரும்பினார்கள். அவர்கள் நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்பதை அறிவார்கள்.”
பாபிலோன் எகிப்தைக் கைப்பற்றும்
17இருபத்தேழாம் ஆண்டின் முதலாம் மாதம் (ஏப்ரல்) முதலாம் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18“மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.” 19எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “நான் எகிப்து நாட்டை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களைச் சிறை எடுத்துச்செல்வான். நேபுகாத்நேச்சார் எகிப்திலிருந்து பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்வான். இது நேபுகாத்நேச்சாரின் படைகளுக்கான கூலியாகும். 20நான் நேபுகாத்நேச்சாருக்கு அவனது கடுமையான உழைப்புக்குப் அன்பளிப்பாக எகிப்தைக் கொடுப்பேன். ஏனென்றால், அவர்கள் எனக்காக உழைத்தார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்!
21“அந்த நாளில் நான் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பலமுள்ளவர்களாக்குவேன். பிறகு உன் ஜனங்கள் எகிப்தியரைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 29: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International