எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 19
19
1தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப்பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.
2“‘உன்னுடைய தாய், அங்கு
ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள்.
அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள்.
பல குட்டிகளை பெற்றெடுத்தாள்.
3தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது.
அது பலமான இளஞ்சிங்கமாக வளர்ந்திருக்கிறது.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது.
அது மனிதனைக் கொன்று தின்றது.
4“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர்.
அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்!
அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்:
அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.
5“‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது.
ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது.
எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது.
சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.
6அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது.
அது பலமான இளம் சிங்கமாயிற்று.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது.
அது மனிதனைக் கொன்று தின்றது.
7அது அரண்மனைகளைத் தாக்கியது.
அது நகரங்களை அழித்தது.
அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
8பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர்.
அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.
9அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள்.
அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர்.
எனவே அவர்கள் பாபிலோன் ராஜாவிடம் கொண்டு போனார்கள்.
இப்பொழுது அதன் கர்ச்சனையை
இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,
10“‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட
திராட்சைக் கொடியைப் போன்றவள்.
அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது.
எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
11பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள்.
அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன.
அக்கிளைகள் ராஜாவின் செங்கோலைப் போன்றிருந்தன.
அத்திராட்சைக் கொடி மேலும், மேலும் உயரமாக வளர்ந்தது,
அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.
12ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு
தரையில் வீசியெறியப்பட்டது.
சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது.
பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.
13“‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது.
இது வறண்ட தாகமுள்ள நிலம்.
14பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது.
அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது.
எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை.
ராஜாவின் செங்கோலும் இல்லை.’
இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 19: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International