யாத்திராகமம் 1

1
எகிப்தில் யாக்கோபின் குடும்பம்
1யாக்கோபு (இஸ்ரவேல்) தன் குமாரர்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு குமாரனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் குமாரர்கள்: 2ரூபன், சிமியோன், லேவி, யூதா, 3இசக்கார், செபுலோன், பென்யமீன், 4தாண், நப்தலி, காத், ஆசேர். 570 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 குமாரர்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.)
6பின்னர், யோசேப்பும் அவனது சகோதரர்களும் அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே மரித்துவிட்டார்கள். 7ஆனால் இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடும் இஸ்ரவேலரால் நிரம்பிற்று.
இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை
8அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய ராஜா எகிப்தை அரசாள ஆரம்பித்தான். 9இந்த ராஜா தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்! 10இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும்” என்றான்.
11இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையைச் சிரமமாக்குவதென எகிப்திய ஜனங்கள் முடிவெடுத்து, அவர்களிடையே மேற்பார்வையாளர்களை எகிப்தியர் நியமித்தார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் பித்தோம், ராமசேஸ் நகரங்களை ராஜாவுக்காகக் கட்டும்படியாக இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினர். தானியங்களையும் பிற பொருட்களையும் சேர்த்து வைப்பதற்காக ராஜா இந்நகரங்களைப் பயன்படுத்தினான்.
12மிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர். 13எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள்.
14இஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள்.
தேவனைப் பின்பற்றிய மருத்துவச்சிகள்
15இஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளிடம் பேசி, 16“எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான்.
17ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.
18எகிப்திய ராஜா மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
19மருத்துவச்சிகள் ராஜாவை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர். 20-21தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார்.
எபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர். 22எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாத்திராகமம் 1: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்