யோவான் எழுதிய மூன்றாம் கடிதம் 1:1-8

யோவான் எழுதிய மூன்றாம் கடிதம் 1:1-8 TAERV

மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது, எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது. எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! இச்சகோதரர்கள் உனது அன்பைக் குறித்து சபைக்கு கூறினர். அவர்கள் பயணத்தைத் தொடருவதற்குத் தயவு செய்து நீ உதவு, தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் வழியில் அவர்களுக்கு உதவு. கிறிஸ்துவின் சேவைக்காக இச்சகோதரர்கள் பயணம் மேற்கொண்டனர். தேவனில் விசுவாசமற்றோரிடமிருந்து அவர்கள் எந்தவித உதவியையும் ஏற்கவில்லை. எனவே இச்சகோதரருக்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களுக்கு உதவும்போது, உண்மைக்கான அவர்கள் வேலையில் நாமும் பங்கு கொள்வோம்.