சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 14

14
யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்
1தாவீது ராஜா அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் குமாரனாகிய யோவாப் அறிந்தான். 2எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. 3ராஜாவிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.
4பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் ராஜாவிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “ராஜாவே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.
5தாவீது ராஜா அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.
அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். 6எனக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். 7இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது குமாரனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது குமாரன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே குமாரன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.
8அப்போது ராஜா அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.
9தெக்கோவாவின் பெண் ராஜாவை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய ராஜாவே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.
10தாவீது ராஜா, “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.
11அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது குமாரனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் குமாரனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.
தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் குமாரனைத் தாக்கமாட்டார்கள். உன் குமாரனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.
12அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.
ராஜா, “சொல்” என்றான்.
13அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது குமாரனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15எனது ஆண்டவராகிய ராஜாவே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் ராஜாவிடம் பேசுவேன். ராஜா ஒருவேளை எனக்கு உதவலாம். 16ராஜா நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது குமாரனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17எனது ராஜாவாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.
18தாவீது ராஜா அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.
19ராஜா, “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
அப்பெண் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.
அப்சலோம் எருசலேம் திரும்புதல்
21ராஜா யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
22யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது ராஜாவை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.
23பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24ஆனால் தாவீது ராஜா, “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் ராஜாவைப் பார்க்கபோக முடியவில்லை.
25அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27அப்சலோமுக்கு மூன்று குமாரர்களும் ஒரு குமாரத்தியும் இருந்தனர். இந்த குமாரத்தியின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.
யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்
28அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது ராஜாவைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை ராஜாவிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.
30அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.
எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.
32அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை ராஜாவிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் ராஜாவைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.
அப்சலோம் தாவீது ராஜாவை சந்தித்தல்
33பின்பு யோவாப் ராஜாவிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். ராஜா அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் ராஜாவிடம் வந்தான். அப்சலோம் ராஜாவுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 14: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்