ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:1-12

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:1-12 TAERV

எசேக்கியா என்பவன் யூத ராஜா ஆகாஸின் குமாரன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் குமாரன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள். எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான். எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர். அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான். எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான். அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத ராஜாவாகிய எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) அசீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.