2 இராஜாக்கள் 18:1-12

2 இராஜாக்கள் 18:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான். மூன்றுவருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது. அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.

2 இராஜாக்கள் 18:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது. எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான். யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான். அவன் பெலிஸ்தியருடன் போரிட்டு, காவற்கோபுரம் தொடங்கி அரணான பட்டணம்வரை காசாவின் எல்லைவரை அவர்களைத் துரத்தினான். எசேக்கியா அரசனாக வந்த நான்காம் வருடம், ஏலாவின் மகனான இஸ்ரயேல் அரசன் ஓசெயாவின் ஏழாம் வருடமாயிருந்தது. அந்த வருடத்தில் அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டான். மூன்று வருடங்களுக்குப் பின்பு அசீரியர் சமாரியாவைக் கைப்பற்றினார்கள். அந்த வருடம் எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியும், இஸ்ரயேலின் அரசனாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியுமாயிருந்தது. அப்போது அசீரிய அரசன், இஸ்ரயேலரை அங்கிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தி, அவர்களைக் ஆலாகிலும், ஆபோர் ஆற்றுக்கு அருகே இருக்கும் கோசானிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய உடன்படிக்கையை மீறியதால்தான் இவை நடந்தன. யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, அவற்றின்படி நடக்கவுமில்லை.

2 இராஜாக்கள் 18:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருட ஆட்சியில் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான். மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது. அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.

2 இராஜாக்கள் 18:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

எசேக்கியா என்பவன் யூத ராஜா ஆகாஸின் குமாரன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் குமாரன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள். எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான். எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர். அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான். எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான். அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத ராஜாவாகிய எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் ராஜாவாகிய ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) அசீரியாவின் ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.