சாமுவேலின் முதலாம் புத்தகம் 3:3-10

சாமுவேலின் முதலாம் புத்தகம் 3:3-10 TAERV

சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான். ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான். ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை. கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான். பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார். சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.