ராஜாக்களின் முதலாம் புத்தகம் 1

1
அதோனியா ராஜாவாக விரும்புகிறான்
1தாவீது ராஜா வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது. 2எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர். 3எனவே ராஜாவின் உடலில் சூடேற்றும் பொருட்டு ராஜாவின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் ராஜாவிடம் அழைத்து வந்தனர். 4அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் ராஜாவை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் ராஜாவாகிய தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.
5தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் குமாரன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய ராஜாவாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு ராஜாவாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும், குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக் கொண்டான். 6அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்றும் கேட்கவில்லை.
7செருயாவின் குமாரனான யோவாபோடும் ஆசாரியனாகிய அபியத்தாரோடும் அதோனியா பேசினான். அவன் புதிய ராஜாவாக அவர்கள் உதவ முடிவு செய்தனர். 8ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் குமாரனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.
9ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற குமாரர்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான். 10ஆனால் அவன் தந்தையின் சிறப்பான மெய்க்காவலாளியையும், தன் சகோதரனான சாலொமோனையும், தீர்க்கதரிசிகளாகிய நாத்தான், பெனாயா ஆகியோரையும் அழைக்கவில்லை.
நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல்
11ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் குமாரனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே ராஜாவாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் ராஜனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 12உங்கள் வாழ்வும், உங்கள் குமாரன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன். 13ராஜாவிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் ராஜாவும் ஆண்டவனுமானவரே! என் குமாரன் சாலொமோனே அடுத்த ராஜாவாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு ராஜாவாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள். 14நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் ராஜாவிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
15எனவே பத்சேபாள் ராஜாவை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். ராஜா முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். 16அவள் ராஜாவின் முன்பு குனிந்து வணங்கினாள். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று ராஜா கேட்டான்.
17பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் குமாரனான சாலொமோனே அடுத்த ராஜா. சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள். 18இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே ராஜாவாக்கிக்கொண்டிருக்கிறான். 19அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து குமாரர்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள குமாரனான சாலொமோனை அழைக்கவில்லை. 20எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த ராஜா யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள். 21நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் குமாரன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
22இவ்வாறு அவள் ராஜாவோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான். 23வேலைக்காரர்கள் ராஜாவிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் ராஜாவிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். 24பிறகு அவன், “எனது ஆண்டவனும் ராஜனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த ராஜா என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா? 25ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து குமாரர்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா ராஜா நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர். 26ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் குமாரனான பெனாயாவையும், உங்கள் குமாரனான சாலொமோனையும் அழைக்கவில்லை. 27எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் ராஜா ஆவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
28பிறகு ராஜாவாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
29பின்னர் ராஜா, ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் குமாரனான சாலொமோனே ராஜாவாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
31பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து ராஜாவை வணங்கினாள். அவள், “தாவீது ராஜா நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.
சாலொமோன் புதிய ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுதல்
32பிறகு தாவீது ராஜா, “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து ராஜா முன்பு நின்றனர். 33அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய ராஜாவாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் ராஜாவாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
36யோய்தாவின் குமாரனான பெனாயா, “எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37என் ராஜாவும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
38எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது ராஜாவுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை ராஜாவினுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி ராஜாவாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “ராஜா சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.
41இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.
42அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் குமாரனான, யோனத்தான் வந்தான்.
அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.
43ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது ராஜா சாலொமோனைப் புதிய ராஜாவாக நியமித்துவிட்டான். 44அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் ராஜாவின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை ராஜாவாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47அனைத்து அதிகாரிகளும் ராஜா தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது ராஜாவே, நீ மிகப் பெரிய ராஜா! சாலொமோனையும் மிகப் பெரிய ராஜாவாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.
அங்கே தாவீது ராஜாவும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48ராஜா தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் குமாரனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
49அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.#1:50 பலிபீடத்தின் … பிடித்துக்கொண்டான் அவன் இரக்கத்துக்காக கேட்டுக்கொண்டிருந்தான் என்பதை இது காட்டியது. ஒருவன் பரிசுத்தமான இடத்துக்குள்ளே ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்தால் அவன் தண்டிக்கப்படக் கூடாது என்று சட்டம் இருந்தது. 51சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.
52எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 1: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்